56
அறிஞர் அண்ணா
தே : நான் செய்ததற்காக நான் மனமார வருந்துகிறேன், சொர்ணம் என்னை மன்னித்துவிடு.
சொ : இப்போதும், உமது சுகத்தைத்தான் தேடிக் கொள்கிறீர். மன்னிப்புக் கேட்கிறீர். உம்முடைய மனச் சாந்திக்காக. நான் அதனை உமக்கு அளிக்க முடியும். ஆனால் உலகம் என்னை மன்னிக்குமா? 'பாவம்! அவள்மீது குற்றமில்லை! சமூகக் கட்டுப்பாட்டுக்குப் பயந்த ஒரு ஆடவனால் அவள் கைவிடப்பட்டாள்' என்று கூறுமா? என்னைப் பார்த்ததும் உலகம் என்ன சொல்லும்?
'போகிறாள் பார் விபசாரி!'
'குலுக்கி நடக்கிறாள்.'
'மினுக்கிக் கொண்டு திரிகிறாள்!'
'மிட்டாதாரனை மயக்கினாள்!’
என்று கேலியும் கண்டனமும் கலந்த குரலில் பேசும். சீமான்களோ. கண்ட உடனே. என்ன விலை தரலாம் என்று மதிப்புப் போடுவார்கள். அவசரக்காரர்கள் விலாசம் விசாரிப்பார்கள்: அழுத்தக்காரர்கள் பெருமூச்சுடன் நின்று விடுவார்கள்.
நான் இன்று நடமாடும் நாசம்! சரசமாடும் சனியன்! வலைவீசும் வனிதை!
திருப்புகழ் பாடட்டுமா? [இரண்டோர் அடி பாடுகிறாள்]
இப்படி எல்லாம். எச்சரிக்கை செய்கிறார்கள், என்போன்றவர்களைப்பற்றி, கண்ணாடி, என்னை ஓர் அழகி என்று கூறுகிறது. உலகமோ, அபாய அறிவிப்பு என்று சொல்கிறது. இவ்வளவும்.....
தே : என் மனம் உறுதி கொள்ளாததால்தான்.....
சொ : இங்கே நான். மாளிகையிலே பார்க்கிறேன், கூடைகூடையாகப் பழம் வரும். தின்பாரின்றி அழுகும். அழுகிய பிறகு குப்பையிலே வீசுவார்கள். பிறகு அதிலே புழு நெளியும். நான் அழுகிய பழம்! அழுகியது என் குற்றமல்ல.
தே : குற்றவாளி நான்தான்.