பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் இரவு

57


சொ : உலகம் விசித்திரமான நீதிமன்றம்: நீரே, கூண்டேறி உமது குற்றத்தை ஒப்புக்கொண்டால்கூட தண்டனை எனக்குத்தான் தரும்!

தே : சொர்ணம்! என் மனம் படும் பாடு, சொல்லி முடியாது.

சொ : என் இளமை, அழகு. அன்பு. ஆவி எல்லாவற்றையும் அர்ப்பணம் செய்ய முன்வந்தேன்: உமது காலடியில் வைத்தேன். உதைத்துத் தள்ளினீர் - உதறித் தள்ளினீர் - இன்று.... துரத்திக் கொண்டு வருகிறீர். ஆனால் உமது பிடிக்கு அகப்பட முடியாத உயரத்தில் நான் இருக்கிறேன்.

தே : என் இருதயத்திலே நீ இடம் பெற்றுவிட்டாய்.

சொ : ஒரு வகையான திருப்தி! எனக்கும் ஒரு விதமான திருப்தி, ஏழ்மையிலேயே புரண்டு கிடந்தேன். இப்போது மிட்டாதாரர் பணத்தால் அபிஷேகிக்கிறார் என்னை.

தே : பணமா பெரியது?

சொ : சந்தேகம் என்ன? வாழ்க்கையிலே பிரதானமாக இருக்கும் விதமாகத்தானே உலகம் இருக்கிறது. ஏழை என்றும் பணக்காரரென்றும் இரண்டு ஜாதி இல்லாமல், ஒரே ஜாதியாக இருந்தால், எனக்கும் இந்த எண்ணம் உண்டாகாது. பணமின்றி என் குடும்பம் பதைத்தபோது பணமா பெரிது என்று வேதாந்தம் பேசிக்கொண்டு, எங்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லையே! பணம் எந்த விதத்திலோ என்னிடம் வந்த பிறகுதான் நான் பரிமளத்துடன் வாழ முடிந்தது. எனக்குத் துரோகம் செய்த சீமானே கண்டு மலைக்கும்படியான மாளிகையிலே உலாவ முடிந்தது.

[தேவர் தலையில் கைகளால் மோதிக்கொண்டு கதறுகிறார். சொர்ணத்தின் மனம் இளகி விடுகிறது. அருகே சென்று அவர் கைகளைப் பிடித்திழுத்து]

சொ : அழாதே! கண்ணே! உன்னை நான் அதிகமாகத்தான் வாட்டிவிட்டேன். பழுக்கக் காய்ச்சிய சொற்களை வீசினேன்! ஆனால் அவை. என் வேதனையின் விளைவு!