60
அறிஞர் அண்ணா
[சொர்ணத்தைத் துரத்துகிறார். அவள் தள்ளாடித் தோட்டத்தை விட்டுச் செல்கிறாள். தேவர் தெளிவடைகிறார். அவரை மிட்டாதாரர் மறுபடியும் தாக்க, தேவர், மிட்டாதாரர் காலில் வீழ்ந்து]
தே : துரோகம் செய்துவிட்டேன், நான் துரோகி, துரோகி, மன்னிக்கவேண்டும்....
மி : மன்னிக்க வேண்டும்! உன்னை! விருந்துக்கு வந்த இடத்தில் விபசாரியை விபசாரத்துக்கு இழுத்த உன்னை? அடே! கருணாகரா! என்னிடம் பேசாதே! நில்லாதே: எழுந்து நட!
[தேவரும் தள்ளாடி நடந்து போகிறார்]
காட்சி - 21
இடம் :- பாதை.
இருப்போர் :- தேவர், சொர்ணம்.
[தள்ளாடிச் செல்லும் சொர்ணம் பாதையில் ஓர் ஓரத்தில் நின்றுகொண்டிருக்கிறாள். தேவரும் வந்து சேருகிறார்.]
சொ : துரையே! அந்தச் சிறையிலிருந்து வெளிவந்து விட்டேன். நான் பட்ட இம்சையைக் கூட மறந்து விடுகிறேன்; என்னால் தங்களுக்கு இந்தக் கஷடம் வந்ததே.
தே : வாழ்க்கையிலே மறக்கமுடியாத அவமானத்தை அடைந்தேன். தீராத பகை மூண்டுவிட்டது எனக்கும் மிட்டாதாரருக்கும்.
சொ : எல்லாம் என்னால்....இந்தப் பாதகியால்.
தே : ஆமாம். (வெறுப்புடன் கூறுகிறார்)
சொ : (திகைக்கிறாள், தேவர் பேச்சுக் கேட்டு) என்ன? என்னாலா? உங்கள் வாயால் அப்படிச் சொல்லாதீர். நான் எவ்வளவோ தடுத்தேன், பொறிபறக்கப் பேசினேன், நீங்கள் தானே அழுது நின்றீர்.
தே : எனக்குச் சபலம் பிறந்தது, மயங்கினேன். அவ்வளவு சம்பத்துடன் அவன் உன்னை வைத்திருக்கும்போது, உனக்கு எப்படியடி துரோக சிந்தனை ஏற்பட்டது?