பக்கம்:ஓலைக் கிளி.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

தோட்டம் இருந்தது. அதிலே நீரூற்றுகள் சிலுசிலு வென்று ஓடிக்கொண்டிருந்தன: குயில்கள் பாடின; மயில்கள் ஆடின. பச்சைக்கிளிகள் கொஞ்சிப் கொஞ்சிப் பேசின.

இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு மகிழ்ச்சியோடு தங்கவேல் மறுபடியும் மாளிகைக்குள் நுழைந்தான். இன்பலோகத்தில் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அப்படியே ஒரு பட்டு மெத்தை விரித்த கட்டிலிலே அமர்ந்து தலையணையில் சாய்ந்தான். சுகமாகத் தூக்கம் வந்தது. அவன் அப்படியே தூங்கிப்போய்விட்டான்.

தங்கவேல் மறுபடியும் கண்ணை விழிக்கும்போது பழையபடி மரத்தின் அடியிலே ஓலைத் தடுக்கின்மேல் படுத்திருந்தான். கொஞ்ச நேரத்திற்கு முன் அவன் மேலிருந்த பட்டாடைகளையெல்லாம் இப்பொழுது காணோம். கிழிந்து போன பொம்மைக்கிளி பக்கத்தில் இருந்தது, பாட்டி கொஞ்ச தூரத்தில் வெறுந்தரையில் படுத்திருந்தாள். தங்கவேலுக்கு முதலில் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. ஆனால் பக்கத்திலே பிய்ந்துபோன அந்தக் கிளிப் பொம்மையைப் பார்த்ததும் மனத்துக்குத் தைரியம் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓலைக்_கிளி.pdf/10&oldid=1027466" இலிருந்து மீள்விக்கப்பட்டது