பக்கம்:ஓலைக் கிளி.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15


“இந்தக் கிளி மேலே ஏறிக்கொண்டு என்னோடு வருகிறாயா? அழகான முத்து மாளிகைக்குப் போகலாம். அங்கே விளையாடலாம்” என்று அவன் சொல்லிக்கொண்டே கிளிப்பொம்மையைக் குழந்தைகளுக்குக் கொடுப்பான்.

ஆனால், அவன் சொல்வது மற்ற குழந்தைகளுக்கு விளங்காது. ஏனென்றால், அவர்களுக்குத் தங்கவேலின் கனவுகளைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவன் சொல்லுகின்ற மாளிகையைப்பற்றியும் தெரியாது. அதனால் அவர்கள் பதில் சொல்லாமல் விழித்துக்கொண்டிருப்பார்கள். பிறகு தங்கள் வீட்டுக்குப் போய்விடுவார்கள்.

ஒவ்வொரு குழந்தையும் கிளிப்பொம்மை வாங்கும் போது தங்கவேல் சந்தோஷமடைய ஆரம்பித்தான். தன்டைய ஓலைக்கிளி பிய்ந்து போனதாக இருந்தாலும் அதுதான் மற்ற ஓலைக்கிளிகளைவிட உயர்ந்தது என்று அவன் நிச்சயமாக நம்பினான். அதுதானே அவனைத் தன் முதுகில் தூக்கிக்கொண்டு எங்கெங்கோ பறந்து செல்கிறது ? கிழவிக்கு இப்பொழுது அவனிடத்திலே கொஞ்சங் கூடக் கோபம் கிடையாது. “தங்கம் நல்ல பையனாகிவிட்டான்; அவன் விளையாட்டுப் பையனாக இல்லை. இனிமேல் அவன் தொழில் செய்து பிழைத்துக்கொள்வான்” என்று அவள் மனத்திற்குள்ளேயே மகிழ்ச்சியடைந்தாள்.

இவ்வாறு தங்கவேலும் அவனுடைய பாட்டிக் கிழவியும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓலைக்_கிளி.pdf/12&oldid=1027469" இலிருந்து மீள்விக்கப்பட்டது