பக்கம்:ஓலைக் கிளி.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22


மறுநாள் இரண்டாவது அரசகுமாரன் திருடனைக் கண்டுபிடிக்கச் செல்ல வேண்டும் என்பது ராணியின் கட்டளை. அதன்படியே அவனும் சென்றான். அவனுக்கும் திருடனைக் கண்டுபிடிப்பதில் வெற்றி கிடைக்கவில்லை. அவனும் தனது தம்பிகளைச் சந்திக்க முடியாமலேயே பாதாளச் சிறைக்குப் போகவேண்டியதாயிற்று.

இவ்வாறே மூன்றாவது அரசகுமாரனும், நான்காவது அரசகுமாரனும் குளத்தடியில் காவல் புரிந்து திருடனைக் கண்டுபிடிக்காமல் பாதாளச்சிறை சேர்ந்தார்கள். கடைசியில் எல்லோருக்கும் இளையவனான ஐந்தாவது அரசகுமாரனுடைய முறை வந்தது. அவன் சிறு பையன். அவன் பெயர்விக்கிரமன். அவனுக்குவயது ஆறுகூடநிரம்பவில்லை. இருந்தாலும் அவனும் திருடனைக் கண்டுபிடிக்கப் போக வேண்டும் என்று ராணி உத்தரவு போட்டாள்.

விக்கிரமன் தைரியமாகப் புறப்பட்டான். அவனும் அவனுடைய சிறிய வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டான். திருடனைப் பார்த்தால் உடனே அம்பு போட்டுக் கொன்றுவிட வேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்டான்.

விக்கிரமன் இரவு முழுவதும் தூங்கவேயில்லை. ஜாக்கிரதையாக அடுத்த நாள் காலையில் மலரப்போகும் தாமரை மொக்கையே பார்த்துக்கொண்டு குளக்கரையில் அமர்ந்திருந்தான். அடிக்கடி கண்ணில் தண்ணீரைத் தெளித்துக் கொண்டான்.

பொழுது விடியும் சமயம் வரையில் யாரும் வரவில்லை. அந்தத் தாமரை மொக்கும் அப்படியே இருந்தது ; அது கொஞ்சம் கொஞ்சமாக விரியத் தொடங்கியது.

கொஞ்சம் மங்கலாக வெளிச்சம் பரவத் தொடங்கிற்று. அந்தச் சமயத்திலே ஒரு அற்புதமான பஞ்சவர்ணக்கிளி யொன்று குளத்திற்கு மேலே சத்தமில்லாமல் பறந்து வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓலைக்_கிளி.pdf/19&oldid=1027476" இலிருந்து மீள்விக்கப்பட்டது