பக்கம்:ஓலைக் கிளி.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

அது நேராகக் குளத்தின் நடுவே தாமரைப் பூவின் அருகே சென்று அதைத் தன் அலகால் கொத்திப் பறிக்க முயற்சி செய்தது.

விக்கிரமன் அதைப் பார்த்துவிட்டான். ஆனால், அவ்வளவு அழகான அந்தப் பஞ்சவர்ணக் கிளியின்மேல் அம்பு போட அவனுக்கு மனம் வரவில்லை.

"பஞ்சவர்ணக்கிளியே, நீ அந்தத் தாமரைப் பூவைப் பறிக்காதே. பறித்தால் உன்மீது அம்பு போடுவேன். நீ அழகான பறவையாயிருப்பதால், உன்னைக் கொல்ல எனக்கு மனமில்லை. அந்தப் பூ ராணிக்கு வேண்டும்’ என்று விக்கிரமன் சொன்னான்.

பஞ்சவர்ணக்கிளி அவனது பேச்சைக் கேட்டுவிட்டுத் தாமரைப் பூவைப் பறிக்காமல் பக்கத்திலே இருந்த ஒரு மரக்கிளையில் வந்து அமர்ந்தது.

“விக்கிரமா, உன்னுடைய அன்பான பேச்சைக் கேட்டு என் உள்ளம் குளிர்ந்தது. உன் அண்ணன்மார்கள் இவ்வாறு ஒன்றுமே சொல்லாமல் என்மீது அம்பைப் போட்டார்கள். ஆனால், நான் அந்த அம்புகளுக்குத் தப்பிக்கொண்டு பூவைப் பறித்துச்சென்றேன்” என்று கிளி மனித பாஷையில் சொல்லிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓலைக்_கிளி.pdf/20&oldid=1027477" இலிருந்து மீள்விக்கப்பட்டது