பக்கம்:ஓலைக் கிளி.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6


அந்த ஊர்க் குழந்தைகளெல்லாம் அதன்மேல் ஆசை கொண்டார்கள். ஒவ்வொரு குழந்தையும் தனக்கே அது வேண்டும் என்று போட்டி போட்டது. அதனால், கிழவி அதைப் போலவே இன்னும் பல கிளிகள் செய்தாள். அவளுக்குப் பணம் நிறையக் கிடைத்தது. "தங்கம், இந்தப் பணத்தையெல்லாம் வைத்து உனக்கு நல்ல சொக்காய் வாங்கிக் கொடுக்கிறேன்" என்று சிறுவனிடம் கிழவி ஆசையோடு சொன்னாள்.

புதிய சொக்காய் போட்டுக்கொள்ளத் தங்கவேலுவுக்கு ஆசைதான். இருந்தாலும் பாட்டியின் பேச்சைக் கேட்டு அவன் மகிழ்ச்சி அடையவில்லை. அவன் முகம் வாடத் தொடங்கியது ஏனென்றால், அவனுக்குப் பாட்டி செய்யும் கிளிகளிடம் அத்தனை ஆசை. அவற்றை அந்த ஊர்ச் சிறுவர்களும் சிறுமிகளும் வாங்கிக்கொண்டு ஓடுவதைப் பார்த்து அவன் மனம் வருந்தினான். அவையெல்லாம் தனக்கே வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

"பாட்டீ, இந்தக் கிளிகளை விற்கவேண்டாம்" என்று அவன் கண்ணீர் பெருக்கிக்கொண்டு கிழவியிடம் சொன்னான். அவளிடம் கெஞ்சினான்.

"தங்கம், இந்தக் கிளிகளெல்லாம் நமக்கு எதற்கு? காசிருந்தால் என்ன வேணுமானாலும் வாங்கலாம். பொம்மை சோறு போடுமா?" என்று கிழவி ஆறுதல் சொன்னாள். இருந்தாலும் சிறுவனுக்குச் சமாதானம் ஏற்படவில்லை

இவ்வாறு கிழவி கூறிய மறுநாள் காலையில் ஒரு சிறு பெண் கிழவியிடம் வந்து தனக்கு ரொம்பப் பெரிய கிளியாக வேண்டும் என்று கேட்டாள். இதுவரையிலும் யாருக்கும் செய்து கொடுக்காத அளவில் மிகப்பெரியதாகத் தனக்குக் கிளியொன்று வேண்டும் என்று அவள் சொன்னாள். அவள் தகப்பனார்தான் அந்த ஊரிலே எல்லோரையும்விடப் பெரிய பணக்காரர். அவர்களுடைய பெரிய மச்சு வீடு அந்தக் கூடை முறம் கட்டுவோர் தங்கியிருந்த இடத்திற்கு எதிராகவே இருந்தது. அதனால் அந்தப் பெண் கேட்டதும்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓலைக்_கிளி.pdf/9&oldid=1027465" இலிருந்து மீள்விக்கப்பட்டது