பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

பெருஞ்சித்திரனார்

தொழிலின் பிரிவுகளாலே பிரிந்திருந்த இந்த இனம், அரசியலிலே வளர்ந்திருந்த இந்த இனம், பண்பாட்டியலிலே வளர்ந்திருந்த இந்த இனம், கலைகளிலே வளர்ச்சி பெற்றிருந்த இந்த இனம், நாகரிகத்திலே வளர்ச்சி பெற்றிருந்த இந்த இனம், மொழியறிவுக் கூறுகளாகிய மொழியியலிலே வளர்ச்சி பெற்றிருந்த இந்த இனம், -எவ்வளவு பெரிய பேரினம்!

இன்றைக்கு நேற்றன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய உருசிய மொழி, தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முந்தித் தோன்றிய ஆங்கில மொழி, அதற்கு முன்பாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தித் தோன்றிய சமஸ்கிருத மொழி, அதற்குமுன் ஏறத்தாழ ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கிரேக்க இலத்தீன் மொழிகள், முதலிய உலக மொழிகளுக்கு எல்லாம் மூலமான ஒரு மொழியாக நாம் பேசுகிற மொழியாகிய தமிழ்மொழி இருக்கின்றது என்று சொன்னால், இதை அடியோடு அவர்கள் மறுக்கின்றார்கள் - அழிக்கப் பார்க்கிறார்கள் . ஒழிக்கப் பார்க்கிறார்கள் - என்று சொன்னால், இதை ஏதோ நாம் அரசியல் புரட்சியாகவா செய்ய விரும்புகிறோம். ஏதோ ஒரு பொருளியல் புரட்சி செய்ய விரும்புகிறோமா? ஏதோ ஒரு பண்பாட்டியல் புரட்சியாகவா செய்ய விரும்புகிறோம்? இல்லை; கலைக் கூறுகளையா செய்ய விரும்புகிறோம்? இல்லை; இந்த இனம், அதனுடைய நாடி நரம்புகள் அதன் அடிப்படை வேர்கள். மூலங்கள். வித்துகள் அனைத்தும் ஆரியத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றன என்பதை நினைக்கும்போதுதான் - இவ்வளவு சிறப்பாக வளர்ந்திருந்த பெரிய வரலாற்று பெருஞ் சிறப்பான ஓர் இனம் எந்த எந்த வகையிலே அடிமைப்பட்டுவிட்டது என்று எண்ணி-வருந்த வேண்டியிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/35&oldid=1163308" இலிருந்து மீள்விக்கப்பட்டது