பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

ஓ ! ஓ ! தமிழர்களே !

என்று சொல்லுகிறாய்? அது என்ன இறைமை இயல்? அஃது என்ன பிலாசுபி (Philosophy) இண்டியன் பிலாசுபியா? இண்டு பிலாசுபியா? அல்லது 'பாரத மாதா பிலாசுபியா?’ என்னது அது? ஏன்; தமிழர்கள் கோயில்களை வைத்துக் கொண்டு தமிழிலே மந்திரம் சொன்னால் என்ன? எங்களுக்கு ஒரு தமிழியல் வரலாறு இல்லையா? எங்களுக்கும் ஒரு மத இயல், இறைமையியல் இல்லையா? இருக்கிறது. மக்கள் இன நலத்திற்குப் பொதுவான ஒர் உணர்வு அது. அதைச்சரி என்று சொன்னாலும் தவறு என்று சொன்னாலும்,அஃது இருக்கிறது; அது இருக்கவேண்டும் என்று சொன்னாலும் இருக்கக் கூடாது என்று சொன்னாலும் அது இருக்கிறது. ஒரு காலத்தில் இல்லாமல் பிறகு தோன்றியிருக்கிறது; ஒரு காலத்தில் இருந்திருந்து பிறகு இல்லாமல் போய் இருக்கிறது, அது. அதையெல்லாம் ஆராய்ந்து கொண்டுதான் அந்த உரிமைகளையெல்லாம் கொடுப்பேன், வழங்குவேன் என்றும், உங்களையெல்லாம் உயர்ந்த மக்களென்றும் சொல்லுவேன் என்று சொன்னால், அது என்ன பித்தலாட்டம்? அதற்கு எதற்கு அரசியல்? அதற்கு எதற்கு மக்களியல்? - மாந்த வியல்? - சட்டதிட்டங்கள்? - நெறிமுறைகள்? - மாநில அரசுகள்? எல்லாவற்றுக்கும் நீயே வல்லாண்மையாக இருந்துவிட்டு, எல்லாவற்றுக்கும் நான்தான் தலைமை என்று சொல்லி அனைத்ததிகாரமும் எனக்குத்தான் உண்டு; கடவுளுக்கு அடுத்தபடி நான்தான்; நீங்களெல்லாம் எனக்கு அடிமைகள் ஏதிலிகள், புழுக்கள்: பூச்சிகள்; பூண்டுகள்; மரங்கள்: மட்டைகள்: நாங்கள் சொல்லுகிறபடிதான் நீங்கள் கேட்க வேண்டும் என்கிறதுதான் மதம் என்று சொன்னால். அது போன்ற மதம் எங்களுக்கு வேண்டாம், நாங்கள் சொல்வது என்ன? இதுதான். இந்து மதத்தின் கோட்பாடு. ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/66&oldid=1163409" இலிருந்து மீள்விக்கப்பட்டது