பக்கம்:ஓ மனிதா.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

ஓ, மனிதா!

எங்களைப் பிடித்துப் பழக்கிக்கொண்டிருக்க வேண்டும்? அதிலும், அன்றிலிருந்து இன்றுவரை கூட்டு ‘வாழ்க்கை’யில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, அந்த வாழ்க்கையிலேயே நாட்டம் கொண்டிருப்பவர்கள் நாங்கள். நீங்களோ?...

‘நாட்டு வாசிகளாயிருந்த’ காலத்தில் பக்கபலத்தைக் கருதியோ என்னவோ, எங்களைப்போல் நீங்களும் கூட்டுவாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தீர்கள். எல்லாருமாகச் சேர்ந்து உழைத்து கிடைத்ததைச் சேர்ந்து உண்டு களித்தீர்கள். ‘நாளைக்கு நம்மால் உழைக்கமுடியாதே. உட்கார்ந்து சாப்பிடவேண்டுமே, அதற்காக இப்போதே ஏதாவது சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டுமே’ என்ற கவலையெல்லாம் அப்போது உங்களுக்கு இல்லை; ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்று ஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறந்து ஒவ்வொரு நாளும் புதிதாய் வளர்ந்து, ஒவ்வொரு நாளும் புதிதாய் வாழ்ந்து இன்புற்றிருந்தீர்கள், இன்றோ?

‘நாட்டு வாசிகளாகி நாகரிகம் மிக்கவர்களாகிவிட்ட உங்களுக்கு, ‘கூட்டு வாழ்க்கையில் இருந்த நம்பிக்கை போய்விட்டது; தனிப்பட்ட வாழ்க்கையில் நம்பிக்கை வந்துவிட்டது. அதற்காகப் பெற்ற பிள்ளைக்குக் கலியாணம் செய்து வைத்ததும் தந்தையும், உடன் பிறந்த தம்பிக்குக் கலியாணம் செய்து வைத்ததும் அண்ணனும்கூட அவர்களே உடனே பிரித்துத் தனிக் குடித்தனம் வைத்துவிடுகிறார்கள். அவர்கள் வைக்காவிட்டால் கலியாணம் செய்து கொண்டவர்களே அவர்களை விட்டுப் பிரிந்து தனிக்குடித்தனம் செய்யப் போய் விடுகிறர்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/121&oldid=1371360" இலிருந்து மீள்விக்கப்பட்டது