பக்கம்:ஓ மனிதா.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

ஓ! மனிதா!

கிழவர் சொன்னார்:

ஒரு சமயம் நானும் இப்படி ஒரு மாட்டை விற்றேன். ஆனால் அடிமாட்டுக்காரனுக்கு விற்கலே, என்னைப்போல சம்சாரிக்கு விற்றேன். அது அவன் கிட்ட நிற்காம என்னைத் தேடி ஓடி வந்துடும். அவ்வளவு பாசம் அதுக்கு என் மேலே. கடைசியிலே இருக்கிற கஷ்டம் இருக்கட்டும்னு அவன் கொடுத்த காசை அவன் மூஞ்சியிலேயே விட்டெறிந்துவிட்டு அந்த மாட்டை நானே வாங்கி வெச்சுக்கிட்டேன். அந்த மாதிரி இதுவும் என்னைத் தேடி வரணும்கிறது தான் இனிமே என் கவலையாயிருக்கும்.

ஐ. ஏ. எஸ். அதிகாரி சொன்னார்.

“என் கவலை என்ன தெரியுமா? பால் மறத்த மாட்டை வாங்க அடி மாட்டுக்காரன் என்று ஒருவன் இருப்பது போல, வயசாகிப் போன உங்களை வாங்க அப்படி ஒருவன் இல்லையே என்பதுதான்.”

எப்படி இந்தப் பிள்ளை மனம்?

ஓ, மனிதா! இப்போது தெரிகிறதா, உனக்கு?— நானும் அந்தக் கிழட்டுத் தம்பதியரும் எந்த விஷயத்தில் ஒன்று பட்டிருக்கவில்லை என்று?

தெரியவில்லையென்றால் மீண்டும் சொல்கிறேன்—நான் தேவையில்லாத போது அந்த ஐ. ஏ. எஸ். காரரால் என்னை அடிமாட்டுக்காரனுக்கு விற்றுவிட முடிகிறதாம். அதே மாதிரி தன் தாய்-தந்தையரை விற்றுவிட அவரால் முடியவில்லையாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/49&oldid=1370787" இலிருந்து மீள்விக்கப்பட்டது