பக்கம்:ஓ மனிதா.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

ஓ, மனிதா!


அதே மாதிரி திங்கட்கிழமை ஏதாவது ஒரு நல்ல காரியத்தைச் செய்வதாயிருந்தால், அதைக் காலை பத்தரை மணிக்குள்ளேயோ, அல்லது பகல் பன்னிரண்டு மணிக்கு மேலேயோ செய்யும், இடையே வரும் ‘எமகண்டத்’தை இது பெயரிட்டுச் சொல்லாது; சொல்லாமலே விலக்கிப் புதுமை பூக்க வைத்து விடும்!

இம்மாதிரி ‘பகுத்தறிவுச் சிங்க’ங்களின் வீட்டுத் ‘திருமண அழைப்பிதழ்’ ஏதாவது இருந்தால் அதை எடுத்துப் பாருங்கள். மிதுன லக்கினம், அமிர்த யோகம், திருவோன கட்சத்திரம், பஞ்சமி திதி என்று ஒன்றும் இருக்காது; ஆனால் மங்கல நாண் கட்டும் நேரம் மட்டும் ‘காலை ஆறு மணியிலிருந்து ஏழரை மணி அளவில்’ என்று கட்டாயம் விட்டுப் போகாமல் இருக்கும். மற்றவை? – பெயரளவில் விடப்பட்டுப் பெரும் புரட்சி நடந்திருக்கும்.

ஆக, எல்லாமே பொய்; போலி; பித்தலாட்டம்!

இவை மட்டுமா? – ‘தெய்வசிகாமணி’ என்ற பெயரை ‘இறை முடிமணி’ என்று மாற்றிக் கொண்டவர், தமிழ்ப் பற்றில் மறைமலையடிகளை மிஞ்சிவிட்டதாக நினைத்துக் கொண்டு மார்பை நிமிர்த்திக் கொண்டு நடப்பார்.

‘மாணிக்கவாசகம்’ என்ற பெயரை ‘மணிமொழி’ என்று மாற்றிக் கொண்டவர் தமிழ்ப் பற்றில் திரு. வி.க.வைப் புறங்கண்டுவிட்டதாகப் பூரித்துப் போய்விடுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/73&oldid=1369728" இலிருந்து மீள்விக்கப்பட்டது