பக்கம்:ஓ மனிதா.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

விந்தன். வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களையும், தோல்விகளையும், துயரங்களையும் முட்டுக் கட்டைகளையும் அவரால் ‘நன்று’ என்று கருத முடியவில்லை, ஆகவே அவருடைய எழுத்துப் பண்பு வாழ்க்கையைச் சற்றே போராட்டமாக்கிப் புரட்சி செய்வதுதான்.

சுருக்கமாகச் சொன்னால் மனிதன் பேசும் ஆற்றல் படைத்திருப்பது தன் கருத்துகளை மறைப்பதற்காகவே என்பது தெரிந்தே, பேசாத உயிரினங்களைப் பேசவிட்டிருக்கிறார், சராசரி மனிதனிடத்தில் ஆழப்பதிந்துள்ள உணர்ச்சிகளைத் தேடிக் கொணர்ந்து தருகிறார். தீவிரமான மனவெழுச்சிகளைக் கடைந்தெடுக்கிறார்.

கற்றவர் நெஞ்சில் கனலை மூட்டுவதற்கும், மூளைப் புறணிகளில் விழிப்பினை ஊட்டுவதற்கும், நடப்பியல் உலகை எடுத்துக் காட்டுவதற்கும், வேடிக்கை மனிதரின் சிறுமைகளை ஒட்டுவதற்கும் எழுத்துப் புரட்சியும், நகைச் சுவைச் சாட்டையும் எடுத்துக் கொண்ட விந்தனுக்கு நிகர் விந்தனே.

உலகம் என்ற சாணையில் விந்தன் என்ற மனிதன் ஒரு கத்தி. வாழ்க்கை என்ற உலைக் கூடத்தில் விந்தன் ஒரு நெருப்பு. சிந்திப்பவர்க்கு உள்ளத்தின் விளக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/8&oldid=1367789" இலிருந்து மீள்விக்கப்பட்டது