பக்கம்:ஓ மனிதா.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

ஓ, மனிதா!

அதை நான் அறவே வெறுத்துத் தனியாகவே போவேன். கிடைத்ததைத் தனியாகவே தின்று தீர்ப்பேன். இந்த விஷயத்தில் நான் சுதந்திரா கட்சி, அதைச் சொல்லிக் கொள்ள இங்கே நான் வெட்கப்படவில்லை.

இதில் இன்னொரு நன்மையும் உண்டு எனக்கு. வேட்டையின்போது ‘கேவலம் நரிதானே?’ என்று அற்பமாக எண்ணிச் சில பிராணிகள் என்னையே எதிர்த்துத் தாக்கவரும். அசட்டு ஆடு இருக்கிறதே, அதுகூடச் சில சமயம் முன்னங்கால் இரண்டையும் தூக்கித் தூக்கி என்னை முட்ட வரும். அதன் காலுக்கும் கொம்புக்கும் பயந்து நான் ஓடுவதும் உண்டு, அம் மாதிரி சமயங்களில் சக நரிகளில் ஏதாவது ஒன்று எதிரே வந்து, ‘ஏன் இப்படி ஓடி வருகிறாய்?’ என்று கேட்டால் ‘ஆட்டுக்குப் பயந்து ஓடி வருகிறேன்’ என்று சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் என் கௌரவம் என்ன ஆவது? அதனால் தான் ‘புலி புலி’ என்று சொல்லிக் கொண்டே நானும் ஓடி அதையும் ஓட வைத்து விடுவேன். இந்தச் சௌகரியம் கூட்டு வேட்டையில் கிடைக்குமா? கிடைக்கவே கிடைக்காதே!

இந்த ஒரு ரகசியத்தைத் தவிர வேறு எந்த ரகசியமும் என்னிடம் இல்லை. உங்களைப் போல நான் எட்டாதவற்றையெல்லாம் எட்டி எட்டிப் பார்த்து விட்டுக் கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பதும் இல்லை. நீங்கள் வீணாக என் மீது பழிசுமத்துவதற்காக என்னை வைத்து ஒரு கதை கட்டி விட்டிருக்கிறீர்கள்—ம், கதையா அது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/91&oldid=1371030" இலிருந்து மீள்விக்கப்பட்டது