பக்கம்:ஓ மனிதா.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிளி கேட்கிறது

95

‘பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனன்றோ ஆன்ற ஒழுக்கு’

என்ற வள்ளுவர் நெறியை நானுமல்லவா உங்களில் சிலரைப் போல மீறியவனாவேன்?

உண்மையைச் சொல்லப் போனால் மயக்கம் மதுவில் மட்டுமில்லை; அழகிலும் இருக்கிறது. அந்த அழகு ஒரு பெண்ணிடம் குடி கொண்டுவிட்டால் அதனால் விளையும் விபரீதங்கள் தான் எத்தனை, எத்தனை!

சரித்திரப் பிரசித்தி பெற்ற கிளியோபாத்ரா அழகு மயக்கம் ஆன்ட்டனியை என்ன பாடுபடுத்தி வைத்தது! மும்தாஜின் அழகு மயக்கம் ஷாஜஹானை எந்த நிலைக்குக் கொண்டுவந்து சேர்த்தது!

இதெல்லாம் அந்த நாள் கதைகள்; இந்த நாள் கதைகளா?....

அழகு மங்கை ஒருத்தியை ஓர் ஆண் மகன் பார்க்கிறான்; பார்த்ததும் வெறி கொண்ட அவன் அவளைப் பலவந்தப்படுத்தித் தான் நினைத்த காரியத்தைச் சாதித்துக் கொண்டுவிடுகிறான். போலீசார் அவனைக் கைது செய்கிறார்கள். வழக்கு நீதிமன்றத்துக்குப் போகிறது. நீதிபதி அவளையும் அவனையும் மாறி மாறிப் பார்க்கிறார்; பார்த்துவிட்டு மனம் உருகிச் சொல்கிறார்.

‘ஆகா! இந்தப் பெண்ணின் அழகு யாரைத்தான் பலவந்தப்படுத்தத் தூண்டாது? அனுதாபப்படுகிறேன்; இந்தப் பெண்ணுக்காக மட்டுமல்ல அந்தப் பையனுக்காகவும் நான் அனுதாபப்படுகிறேன்!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/96&oldid=1371054" இலிருந்து மீள்விக்கப்பட்டது