பக்கம்:ஔவையார் கதை.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளவையார் கதை

33


அன்பினும் இவ்விரு பெண்கள் காட்டிய அன்பு மேலானது என்று பாராட்டிப் பாடினர். அப்போது அவர் பாடிய பாட்டுத்தான் இது !

பாட்டு

பாரி பறித்த கலனும் பழையனூர்க்
காரி கொடுத்த களைக்கட்டும்-சேரமான்
வாராய் எனஅழைத்த வாய்மையும் இம்மூன்றும்
நீலச்சிற் றாடைக்கு நேர்.

வசனம்

மாரியைப்போல் கைம்மாறு கருதாது வந்தவர்க்கெல்லாம் வாரி வழங்கிய பாரிவள்ளலின் மக்கள் மனமுவந்து கொடுத்த கூழைக் கீரைக்கறியுடன் உண்டு மகிழ்ந்த ஒளவையார், அக் கீரையுணவின் அருமையை வியந்து பாடினார். உயர்ந்த அறுசுவை உணவை யூட்டிய கையால் ஒளவையார்க்குக் கூழும் கீரையும் படைக்கிறோமே என்று பதைபதைத்தார். அந்தப் பாவையர். அவருடைய உள்ள நிலையை உணர்ந்த ஒளவையார், அந்தக் கீரையுணவின் அளவுமீறிய சுவையைக் கண்டு, தொட்டாலும் கைம்மணக்கும் கீரையல்லவா இது! தின்றாலும் வாய் மணக்கும் கீரையல்லவா இது! தின்னத் தின்னத் தெவிட்டாத தெள்ளமுதக் கீரையல்லவா இது! இத்தகைய அருஞ் சுவைக்கறி சமைத்த கைகட்கு வைரமணிக் கடகமன்றே பூட்டவேண்டும்! என்று போற்றினார்.

பாட்டு

வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறையிட்டுப்-பொய்யே
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகம் செறியாதோ கைக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/33&oldid=507922" இலிருந்து மீள்விக்கப்பட்டது