பக்கம்:ஔவையார் கதை.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

ஒளவையார் கதை


வசனம்

இங்ங்னம் பாரிமகளிரைப் பாராட்டியிருக்கும் வேளையில் மழை நின்றது. வானம் விளங்கியது. வெண்மையான பூரணசந்திரன் பால்போல் தண்கதிர் வீசி ஒளி செய்தது. வானத்தில் முழுநிலவைக்கண்ட வனிதையர் இருவர்க்கும் முன்னைய நினைவுகள் உள்ளத்தில் முளைக்கலாயின. முன்வந்த முழுத்திங்கள் நாளையில் தங்களுடைய பறம்புநாட்டில் பெற்ற தந்தையுடன் உற்றார் உறவினருடன் மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழ்ந்த வாழ்க்கைநிலையை எண்ணியபோது அவர்கள் மனம் புண்ணாய் உலைந்தது; ஆறாத துயரவெள்ளத்தில் ஆழ்ந்தது. உடனே அம் மங்கையர் இருவரும் புலம்பிக் கண்ணிர் சொரிந்தவண்ணம்,

பாட்டு

“அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம் எங்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எங்தையும் இலமே.”

வசனம்

என்று கதறிக் கலங்கினர். அங்ஙனம் கலங்கிய கன்னியர் இருவரையும் ஒளவையார் கட்டித்தழுவிக் கண்ணிரைத் துடைத்தார். அவர்களது நிலைக்குப் பெரிதும் இரங்கினர். அவர்கள் அங்குப் பார்ப்பனர் இல்லத்தில், பாரியின் ஆருயிர்த்தோழராகிய கவிஞர் கபிலரால் பாதுகாக்கப் பட்டதையும் தெரிந்தார். அம் மங்கையர்க்குத் தக்க மணுளரைத் தேடி, மணம்முடிக்க மனத்தில் உறுதிகொண்டார். அப்போது திருக்கோவலூரை யாண்டிருந்த மலையமான் தெய்வீகன் என்னும் மன்னனைச் சென்று கண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/34&oldid=507923" இலிருந்து மீள்விக்கப்பட்டது