தென்பாண்டி வில்லிசையைத் தெய்வத் தமிழ்நாடெங்கும் பரப்பும் விருப்புடன் வெளியிட்டுவரும் வில்லுப் பாட்டு நூல்வரிசையில் நாலாவது இடம் பெற்றுள்ளது ஔவையார் கதை. தமிழ் மூதாட்டியாகிய ஔவையாரைப்பற்றிய கதைகள் அளவற்றன. ஔவையார் என்ற பெயரோடு வாழ்ந்த புலவர்கள் பலர் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு.
அவர்களுள்ளே முதல் ஔவையாரென மூதறிவாளர் போற்றும் சங்ககால ஔவையாரின் வரலாற்றை அவர்தம் அரிய பாடல்களின் துணைகொண்டு ஒருவாறு தொகுக்க வியலும். அங்ங்ணம் நல்லறிவாளர் பலர்தொகுத்துத் தந்துள்ளனர். அவர்கள் கருத்துக்களைத் தழுவிச் சங்ககால ஔவையாரின் வரலாற்றை வில்லுப் பாட்டாக இசைத்துத் தந்துள்ளேன். இதனைத் தமிழுலகம் ஏற்றுப் போற்றும் என்று நம்புகிறேன்.
வில்லுப்பாட்டு நூல்களை வரிசையாக அழகுற வெளியிட்டு, அத்துறையில் மேன்மேலும் என்னை ஊக்கி வரும் உயர்தமிழ்ச் சைவப்பேரன்பராய, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் திரு. வ. சுப்பையா பிள்ளையவர்கட்கு எனது உளங்கனிந்த நன்றி.
அ. க. நவநீதகிருட்டிணன்.