பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

ஔவையார் தனிப்பாடல்கள்


வரச்செய்து, அவள் வெட்கம் உடையவளாக விளங்கினால், அவள் வருமானம் ஒழிந்துபோக, அவளும் நிலைகெட்டுச் சீரழிவாள்.

இந்த உண்மைகளைத் தெரிவிப்பது இந்தச் செய்யுள் :

நிட்ரே மாக நிதிதேடும் மன்னவனும்
இட்டதனை மெச்சா இரவலனும் - முட்டவே
கூசிநிலை நில்லாக் குலக்கொடியும் கூசிய
வேசியும் கெட்டு விடும்.

“கொடுமையான முறையிலே பொருள் சேர்க்கின்ற மன்னவனும், இட்ட பிச்சையினைப் பெற்றும் புகழ்ந்து உரையாத யாசகனும், முற்றவும் கூசியவளாகத் தன் கற்பு நிலையில் நில்லாதுபோன குலமகளும், வெட்கிய வேசியும் விரைவிலே கெட்டு விடுவார்கள்” என்பது இதன் பொருள்.

66. வீடும் விழல்!

வாழ்விற் சில பயனுள்ளவைகளாக இருக்கின்றன; சில பயனற்றவைகளாக ஆகிவிடுகின்றன. பயன்தர வேண்டிய சிலவும், சிலபல குறைபாடுகளால் பயனற்றுப் போய்விடுவதும் நிகழலாம்.

வாழ்வு வாழ்வதற்கு உரியது. இன்ப நலன்களைத் துய்த்துப் பெற்றுப் பெருமையோடு இருப்பதற்கு உரியது. அந்த வாழ்விற்கு உறுதுணையாக அமைவது செல்வம் செல்வம் இல்லாத வாழ்வு சீரழிந்த வாழ்வாகப் போய்விடும். திருவள்ளுவர், 'பொருளிலார்க்கு இவ்வுலகமே இல்லை’ என்று கூறுவர். ஒளவையார், 'மாடில்லான் வாழ்வு விழல்' என்கிறார்.

வாணிபத்திற்குப் புத்தி நுட்பம் மிகுதியாக இருக்க வேண்டும். குறைந்த விலைக்குக் கிடைக்கும் இடங்களிற் பொருள்களை வாங்குவதற்கும், அவற்றைக் கூடுதல் விலை கிடைக்கும் இடங்களில் கொண்டு சென்று விற்பதற்கும் புத்தி நுட்பம் இல்லாமல் முடியாது. மதியில்லாதவன் செய்யும் வாணிபம் பயனற்றுப் போய்விடும்.

அரசன், தன் அறக்காவலின் சின்னமாகக் கையிற் கொண்டிருப்பது செங்கோல், நாடற்றுப்போன மன்னன் ஒருவன் செங்கோலை வைத்துகொண்டிருப்பது வீணாகும். அதற்கு எந்த மதிப்பும் கிடையாது. அதனால் பயன் யாதுமில்லை. அவன் நீதியாக ஆட்சிபுரிவது, நாடு அவனுடைய பொறுப்பில் இருந்தால்தான் இயல்வது ஆகும்.