பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

91



கல்வியறிவு கைகூடவேண்டுமானால், நல்ல குருவின் துணை வேண்டும். குருவில்லாமல் தானே கற்கும் கல்வி பயனற்றது; செறிவும் இல்லாதது.

பெண்கள் குணநலத்தால் சிறப்பவர்கள். குணநலமற்ற புெண்ணுடன் கூடி வாழ்வது மிகவும் துன்பந்தருவது. அந்த வாழ்க்கை பயனற்றது.

வீடு என்றால், அதன் நோக்கங்களுள் முதன்மையானது விருந்தினரைப் பேணுதல். விருந்தினரின் வரவில்லாத வீடு ஒரு வீடே ஆகாது.

வாழ்வு சிறப்பதற்கு செல்வம் வேண்டும்; வாணிபஞ் சிறப்பதற்கு மதிநுட்பம் வேண்டும், செங்கோல் நடத்துவதற்கு நாடு வேண்டும்; வித்தை கைகூடுவதற்குக் குருவின் துணை வேண்டும்; குடும்பம் நன்றாயிருக்கக் குணமுள்ள மனையாள் வேண்டும்; வீடு புகழ்பெற விருந்தினர் மிகல் வேண்டும். இவை அமையாதபோது, அவையும் வீண் முயற்சிகளாகிக் கழியும் எனலாம்.

மாடில்லான் வாழ்வு மதியில்லான் வாணிபம்நன்
நாடில்லான் செங்கோல் நடாத்துவது - கூடும்
குருவில்லா வித்தை குணமில்லாப் பெண்டு
விருந்தில்லான் வீடு விழல்.

“செல்வம் இல்லாதவன் வாழ்வு; புத்தி நுட்பம் இல்லாதவன் வாணிபம், நல்ல நாடு இல்லாதவன் நடத்தும் செங்கோல், குருவில்லாமல் கைகூடும் வித்தை குணமில்லாத மனைவி; விருந்தினரை உபசரியாத வீடு; இவை அனைத்தும் பயனற்றவை ஆகும்” என்பது பொருள்.

67. பாராட்டும் இடம்!

ருவரின் சொல்லினாலோ செயலினாலோ நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்களைப் பாராட்டவும் விரும்புகின்றோம். அவர்களை அப்போதைக்கப்போது பாராட்டலாமா என்றால் கூடாது. ஒருவரைப் பாராட்டுவதற்குக்கூடத் தகுந்த நேரத்தை அறிந்தே பாராட்ட வேண்டும். இதனைப் பற்றிக் கூறுகின்ற அறவுரையே இந்தச் செய்யுள்.

நண்பனை நேரிற் புகழ்ந்து பாராட்டுவது சிறப்பன்று. முகஸ்துதி என்று அவன் தவறாகவும் கருதலாம். அவனைப் பாராதபோது, நெஞ்சாரப் போற்றிப் பேசுதலே சிறந்தது.

கல்வி கற்பித்த ஆசிரியனை நேரிலும் போற்ற வேண்டும்; காணாத இடத்தும் போற்றுதல் வேண்டும்.