பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

99



ஒரு சமயம் ஒளவையார் ஓர் ஊரிடத்தே சென்றிருந்தார். அவ்வூரில் சிலர் செல்வர்களாக இருந்தனர். ஈவதற்கு மனம் வராத உலோபியர் அவர்கள். என்றாலும், ஒளவையாரின் வாயால் தம்மையும் பாடும்படியாகச் செய்து கேட்க வேண்டும் என்ற அவா அவர்கட்கும் ஏற்பட்டது.

ஒளவையாரிடம் சென்று பணிந்து நின்று, தம்முடைய ஆர்வத்தை வெளியிட்டனர். ஒளவையார் அவர்களுடைய உள்ளப் போக்கினை அறிந்தார். அதற்கேற்ப ஒரு செய்யுளையும் சொன்னார். அஃது அவர்களின் இயல்புகளைப் புலனாக்கி அவர்களை இடித்துரைத்ததாக அமைந்தது.

மேலும்,நற்குணங்கள் அமையாதவரையும், நல்ல செயல்களை நாடாதவரையும் புலவர்கள் பாடுதல் பொருந்தாததென்ற உண்மையினை வலியுறுத்துவதாகவும் அது அமைந்தது.

"அயன், அரன், அரி என்பவர் முக்கடவுளர். அவர்கட்கும் நாயகனாக விளங்குபவன் பரம்பொருள். அவனைப் பாடினேன்!

சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்கள் தமிழகத்தே உள்ளனர். இளமை நலமுடைய அவர்களின் சிறப்பையும் பாடினேன்.

என் வாய் செய்யுள் மணம் கமழ்ந்து கொண்டிருப்பது. அத்தகைய முப்பெரும் வேந்தரையும், மூவர்க்கும் முதலையும் பாடிப் போற்றிய பெருமை உடையது.

அத்தகைய என்னுடைய வாயினால், 'எம்மையும் பாடுக’ என்று நீங்களும் வந்து கேட்டீர்கள். நூம்மை இவ்விடத்தே யான் எவ்வாறு பாடுவேன்? அது செந்தமிழ் மொழிக்கே பழியாக அமையுமே!

நீங்கள் வீரர்களாக இருந்து, அடுபோர் இயற்றிச் சிறந்த ஆண்மையாளர்களாக இருப்பவர் ஆனால், உங்களைப் போற்றிப் பாடலாம். நீங்களோ வெம்மையான சினம் ததும்பும் கண்களையுடைய போர்க்களிறுகள் வெட்டுண்டு வீழுகின்ற, குருதி வெள்ளத்தாற் சிவந்த போர்க்களத்தினைக் கண்ணாற் காணவும் இயலாத பெருங்கோழைகளாக இருக்கின்றீர்கள்!

உங்கள்பால் கலையார்வம் உளதென்றால், அதனை நோக்கி நும்மிடத்தே குற்றம் நீங்கிய நல்ல யாழிலே இசையினை எழுப்பி, நூம்மை மகிழ்வித்துப் பாடவும் செய்யலாம். அந்த நல்ல யாழிசையினை விருப்பமாகக் கேட்கின்ற தன்மையினைப் பெற்றிராதவர்களாகவும் உள்ளீர்கள்.