பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

ஔவையார் தனிப்பாடல்கள்



நும் மனைவியரையன்றிப் பிற மாதரை நினையாத ஒழுக்கம் உடையவர்கள் என்றிருந்தால், அதற்காக யான் நும்மைப் போற்றிப் பாடலாம். நீரோ முருக்கம் பூப்போலும் சிவந்த வாயிதழ்களை உடையவரான நும் மனைவியரின் இளமைத் தன்மை கொண்ட மார்பைத் தழுவியிருக்கும் அந்த இல்லொழுக்கமும் இல்லாதவர்களாகத் தோன்றுகின்றீர்கள்.

புலவர்களின் வாய்ச்சொற்களில் கலந்து வருகிற அவர்களுடைய வறுமையினாலே எழுகின்ற புலம்பலைக் கேட்டு, அதற்கு இரங்கி அவருக்கு உதவுகின்றவர்களும் நீங்களும் அன்று. அதனாலும், யான் உங்களைப் பாடுதற்கில்லை.

பக்குவமாகச் சமைத்த உணவுகளின் சுவையினை அறிந்தவர்களே அன்றித் தமிழ்ச் சுவையினை அறிந்த தமிழன்பர்களாக உங்களைக் கொள்ளுதற்கும் இயலாது!

நன்றாக உடுக்கவும் மாட்டீர்கள். வயிறார உண்ணவும் மாட்டீர்கள். பிறருக்குக் கொடுக்கவும் மாட்டீர்கள். பிறர் கூறும் நல்ல பொருளமைந்த சொற்களைக் கேட்டு மேற்கொள்ளவும் மாட்டீர்கள்.

மரச்செறிவு நீங்காத காட்டினிடையே, உயரமாக வளர்ந்த மரத்தினிடத்தே விளங்கும் உண்ணுதற்காகாத பழத்தினைப்போல, நீங்களும் பயனற்றவர்களாக இவ்வுலகில் பிறந்துள்ளீர்கள்.

உங்களை யான் எப்படிப் பாடுவேன்?" இந்தக் கருத்துக்களுடன் அமைந்தது செய்யுள். அவர்கள் தலை தாழ்ந்தனர். அத்தகையோரைப் பாடுவது என்ற நிலைமையும் ஒளவையாருக்கு அதன்பின்னர் அவ்வூரில் ஏற்படவில்லை.

இது, செய்யுள் பாடுவது என்பது புலவர்களின் செயல் மட்டுமாக இல்லை; எவரைக் குறித்துப் பாடுதல் வேண்டுமோ அவருடைய பண்புகளைக் குறித்தே அமைவதாகும், அமைய வேண்டுவதாகும் என்பதனையும் உணர்த்தும்.

மூவர் கோவையும் மூவிளங் கோவையும்
பாடிய வென்றன் பனுவல் வாயால்
எம்மையும் பாடுக வென்றணி நூம்மையிங்கு
எங்ஙனம் பாடுகென் யானே வெங்கட்
களிறுபடு செங்களம் கண்ணிற் காணி
வெளிறுபடு நல்யாழ் விரும்பிக் கேளிர்
புலவர் வாய்ச்சொற் புலம்பலுக் கிரங்கீர்
இலவு வாய்ச்சியர் இளமுலை புல்லீர்
அவிச்சுவை யல்லது தமிழ்ச்சுவை தெருளீர்