பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

ஔவையார் தனிப்பாடல்கள்



பசியோ வயிற்றை வாட்டியது. ஒரு வீட்டுத் திண்ணையிலே அமர்ந்தார். அந்த வீட்டுத் தலைவி அவர் சோர்வைக் கண்டு உணவுண்ண அழைத்தாள். 'ஏன் பாட்டி, திருமண வீட்டிலே உண்ணவில்லையோ?' என்றும் கேட்டாள்.

அவளுக்கு அந்தக் கல்யாணத்தின் சிறப்பைக்கூற நினைத்த ஒளவையார், தாம் உணவுண்ணக்கூட இயலாதுபோன அந்த நிலையினைக் கூறுகின்றார். அவர் கூறிய அந்தப் பாடல் இதுவாகும்.

வண்தமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் - அண்டி
நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியி னாலே
கருக்குண்டேன் சோறுண்டி லேன்.

"தமிழ் வளமையானது, அதனைக் கற்றுத் தெளிந்தவன் பாண்டியன். அவன் வீட்டுத் திருமணத்தில் யான் உண்டு மகிழ்ந்த சிறப்பினைச் சொல்லுவேன் கேட்பாயாக!

கூட்டத்திற் சேர்ந்து நெருக்கமுண்டேன். தள்ளுண்டேன். நெடிதாக வருத்திய பசியினால் உடல் சுருக்கண்டேன். இவற்றை உடையவளானேனே அல்லாமல், யான் சோறு உண்டவள் அல்லேன்” என்பது பொருள்.

சோறுண்ணாததைச் சொன்னாலும், அதற்குப் பாண்டியன் மீது ஏதும் தவறில்லை என்றும் நயமாகக் கூறுகின்றார் ஒளவையார்.

75. வடுகனும்! வரதனும்!

ந்த நாளில் செங்கலங்கை வடுகநாத முதலியார் என்றொரு செல்வர் இருந்தார். அவர் தமிழபிமானம் மிகுந்தவர். தமிழறிந்த புலவர்களை உபசரித்துப் பரிசில்பல வழங்கும் இயல்பினரும் ஆவர்.

அவருடைய இளைய சகோதரன் வரதன். அவன் திடுமென்று இறந்துபோனான். அவன் பிணத்தை வந்தவர்கள் அறியாதபடி மூடிவைத்துவிட்டு, விருந்தினர்களை உபசரித்த சிறப்பினர் இவர். இதனால், இவர் புகழ் எங்கணும் பரவியது.

இவரும் இறந்துபோன காலத்தில், இவருடைய மரணத்தையும், இவர் தம்பியின் மரணத்தையும் நினைந்து வருந்திய ஒளவையார், எமதர்மனை நடுநிலை பிறழ்ந்தவன் எனக் கூறிப் பழித்துப் பாடுகின்றார். அந்தப் பாடல் இது.