பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

107



"பிச்சை இடுங்கள், அறநெறியைக் கைக்கொள்ளுங்கள். சிறிதேனும் அன்னத்தைப் பிறருக்கு இட்டு அதன்பின் உண்ணுங்கள்; இவற்றுடன், தெய்வம் ஒருவனே எனவும் உணர வல்லீர்களானால், அரிதான வினைகள் ஐந்தும் அற்றுப்போகும்” என்பது பொருள்.

அருவினைகள் ஐந்து - புலனிச்சைகளால் வருகின்ற வினைகள் ஐந்தும். இவை அறும் எனவே, 'வீட்டின்பம் கிட்டும்' என்பதும் கூறினார்.

78. கொள்ளேன் மதித்து

ரு சமயம் கலைவாணர் பலரும் ஒருங்கே அவைக்கண் கூடியிருந்தனர். அந்த அவையிடத்தே ஒளவையாரும் இருந்தார். ஒளவையார் கூறிய ஒரு கருத்தின்மேல் கருத்து மாறுபாடு எழுந்தது. அனைவரும் அதனை மறுத்துப் பேசினர்.

தாம் சொல்லியதன் உண்மையினைத் தெளிவாக அறிந்தவர் ஒளவையார். பலரும் தம்முடைய கருத்தினை ஏற்காது மறத்து உரைகின்றனரே எனக் கருதி, அவர் மலைத்துவிடவில்லை. பொறுமையுடன் அவற்றைக் கேட்டபடியே வீற்றிருந்தார்.

அப்போது, அவையின் தலைவர், 'அம்மையே! அனைவரும் உரைத்தவற்றைக் கேட்டீர்கள். இனியாவது, தங்களுடைய கருத்தினை மாற்றிக் கொள்ளுங்கள்’ என்றார். அப்பொழுது ஒளவையார் சொல்லியதாக வருகின்ற செய்யுள் இது.

‘புலமை என்பது மிக எளிதானதன்று. எழுந்த பல பிறவிகள் தோறும் ஓதி உணர்ந்த முன்வினைப்பயன் உடையவர்க்கு வந்து வாய்க்கும் பிற்பட்ட பிறவிகள்தோறும், அந்த அறிவும் வலிமை உடையதாகத் தொடர்ந்து வந்தடைந்திருக்கும்.இதுவே உலகத்தின் நியதி.

இதனை அறியாது, இங்குள்ள கலைவாணர்கள் பலர், பலவற்றையும் என்னுடைய அறியாமை அகலும்படியாகச் சொன்னார்கள். அவர்களுடைய் பேச்சினை யானும் கேட்டேன். அதனை மதித்து எனக்கு மலைப்புத் தரும்படியான நிலையில் ஒருபோதுமே கொள்ளமாட்டேன். இதனை அறிக' என்றனர் ஒளவையார். அந்தச் செய்யுள் இதுவாகும்.

எழுபிறவி யோதி யுணர்ந்தார் தமக்கே
வருபிறவி தோறும் வலிதே - இருள்தீர்
கலைவாணர் எல்லாம் கழறினர்காண் நெஞ்சின்
மலைவாகக் கொள்ளேன் மதித்து.