பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

109



“எழுதுதல் அரிதான செய்கையாம்; முன்னம் எழுதியதன் பின்னர் அதனைப் பழுதின்றி வாசிப்பது அரிய செயலாம்; வாசித்தாலும், பண்புடன் அதனை முற்றவும் கற்றல் அரிதாகும்; கற்றாலும் நற்பயனைக் காணல் அரிது; அதனையும் கண்டு விட்டாலும், அந்த நிலையில் தளராது நிற்கும் அந்தத் திண்மை நிலை மிகவும் அரியதாகும்" என்பது பொருள்.

இதனையே, ‘கற்க கசடறக் கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக' என்பார் குறள் நூலார்.

80. தாய் மொழியது!

ன்று இறைவனை வணங்குவதில் அவரவர் தத்தம் தாய் மொழியினைப் பயன்படுத்த வேண்டுமா, அல்லது வழக்கில் புகுந்துவிட்ட வடமொழியையே தொடருதல் வேண்டுமா என்றவொரு விவாதம் நடைபெறுகின்றது. தாய்மொழியையே ஆதரிப்பாரும், வழக்கத்தை மாற்ற வேண்டாம் என்பாரும் பலர். இறைவன் அனைத்துமே அறிந்தவன்; அவனுக்கு எந்தமொழியும் ஒன்றே. இவ்வாறு பட்டும்படாமலும் கூறி ஒதுங்குவார்கள் சிலர். இப்படி ஒரு சர்ச்சை ஒளவையாரின் காலத்திலும் நடந்துள்ளது. அதற்கான ஒரு நல்ல முடியினை அவரும் வகுத்துக் கூறியுள்ளார். அதனை நாமும் காணலாம்.

ஒளவையார், குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரித் திருமால் திருப்பதிக்குச் சென்றிருந்தபோதுதான் இந்தச் சர்ச்சை எழுந்தது. திருக்கோயிலிலே அந்நிய மொழியான வடமொழியினைப் பயன்படுத்துவது கூடாது' என்று சிலர் வாதிட்டனர். பழக்கத்தை மாற்றமாட்டோம் என்றனர் கோயிலார், ஒளவையார் இருவரின் வாதத்தையும் கேட்டு அறிந்தபின் பாடுகிறார்.

'வான் வளி தீ நீர் நிலம் என்பன பஞ்சமகா பூதங்கள். அறம் பொருள் இன்பம் வீடு என்பன வாழ்க்கைப் பேறுகள், அரன் அரி அயன் என்பவர் மூன்று கடவுளர்கள். இவை யாவும் பெய்து அமைந்த செம்பொருளாக விளங்குபவன் இறைவன்.

இவன் எந்த வேதங்களுக்கும் தொலைவாகி, அவற்றைக் கடந்து நிற்பவனும் ஆவான். தண்மை பொருந்திய குருகூரினிடத்தே இவனை வணங்குவதற்குப் பயன்படுத்துவது அந்நிய மொழியே என்று சிலர் சொல்லுகின்றனர். அதுதான் முறையெனவும் சொல்லுகின்றனர். ஆனால், யானோ, வழிபாட்டின் சிறப்பு தாய்மொழியினைப் பயன்படுத்துவதனால் தான் அமையும் என்று, அவர் கருத்தை மறுத்து உரைப்பேன்.'