பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

ஔவையார் தனிப்பாடல்கள்



ஐம்பொருளும் நாற்பொருளும் முப்பொருளும் பெய்தமைத்த
செம்பொருளை எம்மறைக்கும் சேட்பொருளைத் தண்குருகூர்ச்
சேய்மொழிய தென்பர் சிலரியான் இவ்வுலகில்
தாய்மொழிய தென்பேன் தகைந்து.

"ஐவகைப் பெரும் பூதங்களும், நால்வகைப் பேறுகளும், மூவகை மெய்ப்பொருள்களும் ஆகியவற்றைப் பெய்து அமைத்த செம்பொருள் தண் குருகூரின்கண் கோயில் கொண்டிருக்கும் இறைவன். அவன் எந்த வேதங்களாலும் அறிந்துணரவியலாதபடி அவற்றைக் கடந்தும் நிற்பவன்.

அவனை வழிபடும் மரபு வேதமொழியாகிய அந்நியமொழி என்பார்கள். யானோ, இவ்வுலகில் அவரவரின் தாய்மொழியே வழிபாட்டிற்கு உகந்தது என்பதனை வலியுறுத்திச் சொல்வேன்' என்பது பொருள்.

தாய்மொழி வழிபாட்டை ஆதரித்து, இவ்வளவு தெளிவாக வேறு எவருமே கூறவில்லை. குருகூர், நம்மாழ்வார் பிறந்த ஊர்; ஆழ்வார் திருநகரி என வழங்குவது.

81. வாய் மொழிகள்!

ஒளவையாரின் கருத்து கோயிலைச் சார்ந்தவர்க்குப் பொருந்துமாறில்லை. இன்றைக்கு நாலாயிரம் ஆகிய தமிழ் வேதம் திருப்பதிகளிலே முழங்குகின்றது.எனினும், அன்று வடமொழியை விரும்புவோரும் பலர் இருந்தனர். தாய்மொழிதான் வழிபாட்டிற்கு உகந்தது என்றவர், மேலும் அதனையே வலியுறுத்தி மற்றொரு செய்யுளையும் சொல்லுகின்றார்.

அந்நிய மொழியானாலும் சரி, தாய்மொழியானாலும் சரி, சொல்லப்போனால் இறைவனுக்கு இரண்டுமே ஒன்றுதான்.

வேதங்கள் வடபுலத்து ஆன்றோரின் வாய்மொழிகள்; அவர்களுடைய தாய்மொழியும்கூட அது மக்கட்குப் புரியாதபடி இருப்பதனால், அதனை மறை என்றும் சொன்னார்கள்.

அவர்களுடைய தாய்மொழியான வடமொழியைப்போல, மற்றும் சிறந்த பல மொழிகளும் காலந்தோறும் இறைவனைத் துதிக்கப் பயன்பட்டுள்ளன.

இப்படித் துதிக்கப் பயன்பட்ட மொழிகள் பலவாக உள்ளன என்றாலும், அனைத்தும் ஒழித்தற்கு உரியவை என்பேன் நான். தாய்மொழியே பிற அனைத்திலும் சிறந்தது. இதனை வலியுறுத்தியும் யான் உரைப்பேன்.