பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

111



ஒளவையாரின் தமிழ்ப்பற்றும் புலமையும் நல்ல நோக்கமும் பாடலிலே திருநடனம் செய்கின்ற சிறப்பை நாமும் கண்டு களித்துத் தெளிவு பெறலாம்.

சேய்மொழியோ தாய்மொழியோ செப்பில் இரண்டுமொன்றே
வாய்மொழியை யாரும் மறையென்பர்-வாய்மொழிபோல்
ஆய்மொழிகள் சால உளவெனினும் அம்மொழியும்
சாய்மொழிய வென்பேன் தகைந்து.

“தூரத்து மொழியோ தாய்மொழியோ சொல்லப் போனால் இறைவனுக்கு இரண்டுமே ஒன்றுதான். முனிவர்களின் வாய்மொழியான வேதங்களை எவரும் மறை என்று சொல்லு கின்றார்கள். அவர்கள் வாய்மொழிபோல மேலும் காலந் தோறும் ஆய்ந்துரைத்த மொழிகள் பலவாக உள்ளன. எனினும், அம் மொழிவகை அனைத்தும் தள்ளப்பட வேண்டியன. எனவே வலியுறுத்தி உரைப்பேன்" என்பது பொருள்.

82. நாட்டின் வளம்!

வையார் வாழ்ந்த காலத்தில் தமிழகப் பரப்பில் சேர சோழ பாண்டியரும் காஞ்சித் தொண்டைமானும் சிறப்புற்றிருந்தனர். அவர்களது நாட்டின் சிறப்பினை விளக்கிக் கூறக் கருதிய ஒளவையார், அவ்வவற்றின் தனித்தன்மை தோன்ற, இந்தச் செய்யுளைச் சொல்லியிருக்கின்றனர்.

வேழம் உடைத்து மலைநாடு;மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து-பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து;தெண்ணிர் வயற்றொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து.

"மலைப்பகுதி நாடான சேரனுடைய நாடு யானைகளைச் சிறப்பாக உடையதாகும்.

மேன்மை நிரம்பிய சோழனுக்கு உரித்தான வளநாடோ சோற்றுப் பெருக்கத்தினை உடையதாகும்.

பூழியர்களின் கோமானான பாண்டியனின் தென்னாடு முத்துப் பெருக்கத்தை உடையதாகும்.

தெளிந்த நீர் நிரம்பி நிற்கும் வயல்களையுடைய தொண்டை நன்னாடு சான்றோர்களைச் சிறப்பாக உடையதாகும்” என்பது பொருள்.