பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

ஔவையார் தனிப்பாடல்கள்



மன்னனின் அரண்மனை உணவை நினைத்துக் கொண்டார். மக்களின் உணவையும் கருதினார். அவர் உள்ளம் வெதும்பியது. அவற்றோடு தம்மையும் ஈடுபடுத்தி இந்தச் செய்யுளைச் சொன்னார்.

சிறுகீரை வெவ்வடகுஞ் சேதாவின் நெய்யும்
மறுப்படாத் தண்தயிரும் மாந்தி - வெறுத்தேனை
வஞ்சிக்கும் கொற்கைக்கும் மன்னவனேற் பித்தானே
கஞ்சிக்கும் புற்கைக்கும் கை.

“சிறுகீரையை வதக்கிச் சூடாக வைத்த கறியுடனும், பசுவின் நெய்யுடனும், குற்றமற்ற குளிர்ந்த தயிருடனும் உணவுண்டு. அது வெறுத்துப் போனதால் பிரிந்தும் வந்தேன். வஞ்சிக்கும் கொற்கைக்கும் மன்னவன் அது பொறுக்காமற் போலும், என்னைக் கஞ்சிக்கும் கூழுக்கும் கையேந்தி நிற்கும்படியாகச் செய்துவிட்டான்" என்பது பொருள்.

86. ஓட்டைச் செவி

ந்த நாளில் ஏழிற்குன்றப் பகுதியினை ஒரு சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் தமிழ் நலம் அறியாதவன். அதனால் தமிழ்ப் புலவர்களை அவன் விரும்புவதுமில்லை; வரவேற்பது மில்லை. அப்படி யாராவது அவன்பாற் சென்றாலும் அவர்களைச் சாதாரண இரவலர்களாகவே அவன் கருதுவான்.

அந்த வழியாகச் சென்ற ஒளவையார், அவனைச் சென்று கண்டார். அவனைத் தம் வாயால் வாழ்த்தினார். அவனோ, அவரைத் சற்றும் மதியாதவனாக இருந்தான். ஒளவையாருக்குச் சினம் உண்டாயிற்று! அவனுடைய செயலைக் குறித்து இப்படிப் பாடுகின்றார்.

இருள்தீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே
குருடேயும் அன்றுநின் குற்றம் - மருள்தீர்ந்த
பாட்டும் உரையும் பயிலா தனவிரண்டு
ஓட்டைச் செவியும் உள.

"இருளினும் சிறந்த நீலமணியின் ஒளிச்சிறப்பினைக் கொண்டு விளங்கும் ஏழிற்குன்றத்துக்கு உரிய மன்னவனே! எம்மை மதியாத நின் குற்றமானது நின் கண்கள் குருடாயினதனால் ஏற்பட்டது மட்டுமன்று. குற்றமற்ற பாட்டினையும் உரையினையும் கேட்டுப் பழகாதனவான இரண்டு ஓட்டைச் செவிகள் நினக்கு இருப்பதனாலும் ஏற்பட்டாகும்” என்பது செய்யுளின் பொருள்.