பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

ஔவையார் தனிப்பாடல்கள்



106. என் குற்றம்

தொண்டை நாட்டில் சோழகுளம் என்றொரு ஊர் உள்ளது. இதன் பண்டையப் பெயர் 'சோழி சொற்கேளோம்’ என்பது என்பார்கள் ஒளவை துரைசாமி பிள்ளை அவர்கள்.

இந்த ஊரிலே செல்வன் ஒருவன் இருந்தான். இவன் தமிழ்ப் புலவர்களுக்கு ஓரளவு கொடுத்து வந்தவன்தான். எனினும், சோழ நாட்டவரைக் காணவும் பிடிக்காத ஒரு தன்மை உடையவனாகவும் இருந்தான். அவர்கள் பாடினாலும் அவன் எதுவும் தருவதில்லை.

அவனுடைய இந்த உறுதியை அறியாத ஒளவையார், அவன்பாற் சென்று அவனை போற்றிப் பாடிப் பரிசிலும் வேண்டினார். அவன், "இல்லை" என்று கூறி மறுத்துவிட்டான்.

ஒளவையார் மனம் வெதும்பியவராக வெளியேறிச் சென்றார். எதிர்ப்பட்ட மற்றொரு புலவர், “ஏதாவது பெற்றீர்களோ?” என வினவினார். அவருடைய கேள்வி ஒளவையாரின் உள்ளத்தைக் குமுறச் செய்தது. அவர் அப்போது பாடிய செய்யுள் இது.

கல்லாத ஒருவனையான் கற்றாய் என்றேன்
காடேறித் திரிவானை நாடா என்றேன்
பொல்லாத ஒருவனையான் நல்லாய் என்றேன்
போர்முகத்துக் கோழையையான் புலியே றென்றேன்
மல்லாரும் புயமென்றேன் தேம்பற் றோளை
வழங்காத கையனையான் வள்ளால் என்றேன்
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே!

மல்லார்தல் மற்போர் ஆற்றுதல், தேம்பல் தோள் - மெலிவான தோள். இச்செய்யுளின் பொருள் வெளிப்படை ஆனது. "அவனிடம் இல்லாதவைகளை நான் இருப்பனவாகச் சொன்னேன். இல்லாது சொன்ன குற்றத்தால் அவனும் எனக்கு எதுவும் இல்லை என்றான் போலும். ஆகவே நான் ஏதும் பெறாது போகின்றேன்” என்கின்றார், ஒளவையார்.

107. உகுத்தேன்!

வையார் ஒரு சமயம் சிற்றரசனாக இருந்த ஒரு அறிவற்றவனைச் சென்று பாடினார். அவனோ, புலவரைப் போற்றுதலை அறியாத புன்மையாளன். அதனால், அவன் பொருள் வழங்கி அவரை உபசரிக்கவில்லை என்பதோடு, அவரை இகழ்ந்தும் பேசினான். அப்போது, ஒளவையார் சொல்லிய செய்யுள் இது.