பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

ஔவையார் தனிப்பாடல்கள்


இயல்பு. அதனால், இதன் கனிகளை எல்லாம் விழிப்புடன் சேகரித்து எனக்கு அனுப்புவீராக” என்றான் அவன்.

காடு காவலரும் அரசனாணையை ஏற்று, அப்படியே செய்வதாக உறுதியும் கூறினார்கள்.

பல மாதங்கள் கழிந்தன. ஒருநாள், அதியமான் அவையில் அமர்ந்திருந்தபோது, காடு காவலர்களுட் சிலர் அங்கே வந்தனர். அரசனைப் பணிந்து சில நெல்லிக்கனிகளை அவன் முன்பாக வைத்தனர்.

“அரசே! தாங்கள் குறித்த மரத்திலே கிடைத்தவை இவை. இவற்றைச்சிதையாமற்கொய்வதற்கு மிகவும் இடருற்றோம்.தங்கள் ஆர்வம்தான் எங்களை ஊக்கியது. எப்படியோ கொய்து கொணர்ந்து விட்டோம், ஏற்றருள்க" என்றனர்.

அவர்களைப் பாராட்டிச் சில பரிசுகளையும் வழங்கி விடுத்த பின்னர், அதியமான் கனிகளுடன் அரண்மனையுட் சென்றான். ஓரிடத்திலே அமர்ந்து, அவற்றை உண்ணக் கருதியவனாக, ஒன்றைக் கையில் எடுத்தான். அவன் கை அப்படியே மேலெழாமல் தடைப்பட்டது. கனியைக் கீழே வைத்துவிட்டுக் காவற்காரனை அழைத்தான் அவன்.

"நீ சென்று, ஒளவையாரைக் கையோடு அழைத்து வருக” என்றான்.

ஏவலனும் சென்று, அரசனாணையை ஒளவையாரிடம் சொல்லி, அவரையும் அழைத்துக் கொணர்ந்து அதியனிடம் சேர்ப்பித்தான்.

"சுவையான இந்த கனிகளை உண்ணுக" என்றுகூறி, அவற்றை ஒளவையாரின் முன்பாக நீட்டினான் அதியன்.

"நீயும் நின் மனைவி மக்களும் உண்டாயிற்றோ?" என்றார் ஒளவையார்.

"யாங்கள் உண்டாயிற்று, இது தங்களின் பங்கு” என்றான் மன்னன்.

ஒளவையாரும் அந்தக் கனிகளை உண்டபின், நீர் அருந்தி விட்டு, அதன் இனிமையை வியந்தவராக, அதியன் அருகே அமர்ந்தார்.

“அரசே! இந்தக் கனியை உண்பதற்கோ என்னை விரைந்து வரச் செய்தனை” என்று ஒளவையார் கேட்டனர்.