பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

ஔவையார் தனிப்பாடல்கள்


பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கீந் தனையே!

இவ்வாறு தமிழ் மணக்கும் செய்யுளால், அந்தச் செயற்கரிய செயலை வியந்து பாடிப் பரவசமுற்றார் ஒளவையார். அந்தச் செய்யுளைக் கேட்டுப் பெருமிதங் கொண்டான் அதியன். அவன் காலத்தையும் கடந்த புகழ் வாழ்வைப் பெற்றுவிட்டான்!

"பார்த்தீர்களா இப்பொழுது யானும் நெடுநாள் என்ன, என்றைக்கும் வாழும் நிலைபேற்றை அடைந்து விட்டேன். தங்கள் செய்யுள் தமிழுள்ளவரை வாழும்; அது வாழும்வரை யானும் வாழ்வேன்” என்று கூறிக் களிப்பிலே திளைத்தான் அதியமான்.

அவனது பேரன்பின் முதிர்ச்சியையும், வள்ளன்மையின் உயர்ச்சியையும் உன்னியபடியே, ஒளவையாரும் களிப்பு அடைந்தார்.

இந்த நெல்லிக்கனி, உண்டாரை நெடுநாள் வாழவைக்கும் சக்தி படைத்தது என்றும், இதனை உண்டதனாலேயே ஒளவையார் நெடுநாளைய வாழ்வினராயினர் என்றும் கூறுவார்கள். இதனைப் பற்றிய மற்றொரு செய்யுளை முன்னர்க் கற்றிருப்பீர்கள் (செய்யுள் 90). அதனையும் இங்கே நினைக்கவும்.

110. அரிசியும் களிறும்!

நாஞ்சில் நாடு தமிழகத்தின் தென்கோடியிலே, இந் நாளிற் கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரோடு விளங்குகின்றது. எனினும், நாஞ்சில் என்ற அதன் பழைய பெயரும் வழங்காமல் இல்லை. நாஞ்சில் நாடு என்று குறிப்பிடுவோர் பலர் இன்றைக்கும் இருக்கின்றனர்.

இந்த நாஞ்சில் நாட்டிலே, முன் ஒரு காலத்திலே 'வள்ளுவன்’ என்னும் ஒருவன் அரசனாக வீற்றிருந்து, புகழுடன் விளங்கி வந்தான்.நாஞ்சில் வள்ளுவன் எனவும், நாஞ்சிற்பொருநன் எனவும் ஆன்றோர் இவனைப் போற்றினர்.

ஒருசமயம் ஒளவையார், தம்மைச் சார்ந்தோருடன் குமரித்துறைக்குச் சென்றவர், நாஞ்சில் நாட்டின் ஒருசார் வந்து தங்கியிருந்தார். 'இருந்த அரிசி தீர்ந்துவிட்டது. உணவாக வேண்டிய அரிசியைப் பெறுவது எப்படி?' இந்தக் கவலை அவருக்கு உண்டாயிற்று.

நாஞ்சிற் பொருநனை அப்போது நினைத்தார், ஒளவையார் . அவனுடைய தமிழார்வத்தையும் ஈகைப்பண்பையும் கேள்விப்-