பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

ஔவையார் தனிப்பாடல்கள்


அணைப்பிலே, தன் காதலியோடு உறவாடியிருந்த கனவு கலைந்து போனதை நினைந்த வருத்தத்துடன், தோழியை நிமிர்ந்தும் நோக்கினான்.

"இதோ பார்.சீக்கிரமாக எழுந்திரு.உன் காதலி அந்த வேங்கை நிழலில் உனக்காகக் காத்திருக்கின்றாள். உடனேயே சென்று விடுங்கள்” என்றாள்.

அவன் காதுகளில் அச் சொற்கள் விழவும், அவனிடம் புதுக் கிளர்ச்சியும் வலிமையும் தோன்றின. தோழிக்கு நன்றி சொல்லக் கூட அவன் நிற்கவில்லை. வேங்கை மரத்தடிக்கு விரைந்தான்.

அவர்களின் நினைவை மீண்டும் உலகிற்குத் திருப்பத் தோழி பட்டபாடு பெரிதாயிருந்தது. அவர்கள் சென்று விட்டனர்.

பொழுது விடிந்ததும், தலைவியின் இல்லத்திலே ஒரே பரபரப்பு உண்டாயிற்று. அவளைத் தேடியவாறு ஆட்கள் நாலாபுறமும் சுற்றித் திரிந்தனர்.

செவிலித்தாய்க்கு ஒரு நிலைப்படவில்லை. அவள் தன் மகளான, கன்னியின் காதற் தோழியைத் தன்னருகே அழைத்தாள். தலைவியைக் கண்டனையோ எனவும் கேட்டாள்.

"இதற்குள் அவர்களின் மணம் நிறைவேறியிருக்கும், அவர்கள் ஊரில்" என்றாள் மகள்.

தோழியின் கவலையற்ற முகபாவம், அவள் சொற்களின் உறுதியைக் காட்டின. செவிலித்தாயின் கவலைகள் மறைந்தன. அவளது ஏக்கம் நீங்கிற்று. அவள் நேராகத் தலைவியின் தாயிடம் சென்றாள்.

"மிகப் பழையதான ஆலமரத்தின் அடிக்கண்ணுள்ள பொதுவிடத்தே தோன்றிய, நாலூர்க்கோசரின் நன்மொழி பின்னர் உண்மையாகியதை நாம் கண்டுள்ளோம். அதைப் போலவே, அழகிய வீரக்கழலையும், செவ்விய வெள்வேலையும் கொண்ட தலைவனோடு, தொகுவளை முன்கையினளான நம் மடந்தை கொண்ட நட்பும் பொய்யாகிப் போகவில்லை. மணப்பறை ஒலிக்கவும், சங்கம் முழங்கவும் மணவினை நிகழ, உண்மையே ஆயிற்று.”

அவள் இப்படிச் சொன்னாள். அவள் உள்ளம் மகளின் மணவினைக் காட்சிகளைத் தன்னுட்கண்டு, மகளை வாழ்த்துவதாயிற்று பெற்ற தாயும், மகளின் நல்வாழ்வைக் குறித்து வாழ்த்தத் தொடங்கினாள்! பிறரும் அவர்களுடன் கலந்து கொண்டனர்.