பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

19



“சோழனே! காட்டிலே குறவர் வீட்டிலே வெட்டுப்ப்ட்டுப் போன ஒரு பலா மரத்தினைச் சுற்றி ஒரு பெரிய பூசல் நிகழ்ந்து கொண்டிருந்தது.பூசலைப்போக்கக் கருதி அந்த வெட்டுண்டம்ரம் பண்டுபோல் தளிர்த்து நிற்குமாறு பாடினேன்.”

சோழன் வியப்புடன், "அது மீளத் தழைத்ததோ?" என்றான்.

“இறையருள்! அது மீளப் பழையபடியே. பொலிவுடன், நின்றது. குறவர்கள் மகிழ்ந்து என்னை உபசரித்தனர்.அப்போது, அங்குள்ள சிறுவர்கள் உவந்து வழங்கியதுதான் இந்த ஒருபடி தினையரிசி”

“ஒரு படி தினையரிசியா? செயற்கரிய செயலைச் செய்த தங்கட்குப் பரிசு அதுதானா?” சோழன் கேட்டான்.

“தருபவர்களின் அன்பினைத்தான் நான் மதிப்பேன். தருகின்ற பொருளினைப் பெரிதாகக் கொள்வதில்லை. உப்புக்கும் ஒரு கவிதை பாடுவேன். புளிக்கு ஒரு கவிதை பாடவும் என் உள்ளம் இசையும். அதுதான் என் உள்ளத்தின் தன்மை" என்றனர் ஒளவையார்.

சோழன், அவரது உள்ளத்தின் தெளிவாகிய அந்த மெய்யுரையைக் கேட்டதும், மெய்மறந்தவனாக வியந்து நின்று விட்டான். ஒளவையார் ஏழை மக்களிடம் கொண்டுள்ள அன்பு அவருடைய பாடலிலேயும் எதிரொலித்தது.

அவருடைய உள்ளச் செவ்வியைச் சோழனும் அறிந்து, மனங் கலந்து போற்றினான். ஒளவையாரின் புகழ் அவன் மூலம் பலருக்கும் பரவிற்று.

கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறச்சிறார்
மூழக் குழக்குத் தினைதந்தார் - சோழாகேள்
உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒருகவிதை
ஒப்பிக்கும் என்றன் உளம்.

“சோழ ராசனே கேட்பாயாக வெட்டுப்பட்டுப்போன பலா மரத்தைத் தழைக்கும்படிப் பாடினேன். குறச்சிறுவர்கள் ஒரு படி தினையைத் தந்தனர். அதுதான் இது. என் உள்ளம் உப்புக்கும் பாடும் புளிக்கும் ஒரு கவிதை சொல்லும், அந்தத் தன்மையுடையது” என்பது பாட்டின் பொருள்.

கூழைப்பலா என்பது பலா வகையுள் ஒன்று அல்லது மிக உயரமாக வளராத பலா மரம் என்பதும் ஆம். தாம் வைத்த பலா காய்த்துப் பலன் தரும்போது தமக்கும் பிள்ளை பிறக்கும் என்பது குறவர் நம்பிக்கை.