பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

ஒளவையார் தனிப்பாடல்கள்



“வற்றல் மரத்தினைப் போன்றவனான இந்த மனிதனுக்கு இத்தகைய பெண்ணை மனையாட்டியாக விதித்தவன் பிரமன் என்கிறான். அந்தப் பிரமனை யான் நேராகக் காணப்பெற்றால். முன்னால் சிவபெருமானாற் கிள்ளப்பட்டுப்போன ஒரு தலை நீங்கலாக அறுபடாமல் இருக்கும் நான்கு தலைகளையும் பற்றித் திருகி, யான் பறித்துவிட மாட்டேனோ?” என்பது பொருள்.

'மரமனையாளுக்கு இந்த மகனை வகுத்த' எனவும் மூன்றாவது அடி வழங்கும். அது 'வற்றல் மரம்போல அன்பற்ற இவளுக்கு இவனைக் கணவனாக விதித்த என்று பொருளைத் தரும்: அதுவும் பொருந்துவதே!

முதல் அடி, ‘அற்ற தலையின் அருகின் தலையதனை' எனவும் வழங்கும். 'அறுபட்ட தலைக்குப் பக்கத்திலுள்ள தலையை என்று அப்போது பொருள்படும். அந்தக் கணவனின் உள்ளத்தில் அவர் சொற்கள் ஆழப் பதிந்தன. அவன் துணிவு பெற்றான். இல்லற வாழ்வை வெறுத்து வெளியேறிவிடத் துணிந்தான். அதனை அடுத்த செய்யுள் கூறும். திருவள்ளுவரும் ஒரு குறளில் படைப்புக்கு நாயகனை நொந்து கொள்ளுகின்றனர்.

'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.

என்பது அது.


15. சந்நியாசம் கொள்!

வாழ்வு இருவகையானது.ஒன்று இல்லறம் மற்றது துறவறம். இல்லறம் என்பது, இல்லிலிருந்து தக்க மனையாளுடன் கூடி இன்புற்று, இல்லறக் கடமைகளை ஆற்றிச் சிறப்படைவது.

துறவறம் என்பது, அனைத்தையும் கைவிட்டு ஒதுங்கிக் காட்டில் சென்று தவம் பூண்டு ஒழுகுவது.

இல்வாழ்வினர் அதை வெறுத்தால் துறவறத்தை நாடுவார்கள். துறவு நெறியினர் நெறி பிறழ்ந்தால் இல்லறத்தை மேற்கொள்ளத் தொடங்குவார்கள்.

இப்படிப்பட்ட வாழ்வு நெறிகளில் அந்தக் கணவன் இல்ல்றத்தை மேற்கொண்டான். அதுவோ கொடுமையான நரகம் ஆயிற்று. அவன் தனக்கு விதித்த விதி அதுவென்று எண்ணி யிருந்தான். அந்த மயக்கம் தெளியவும், அவன் மனிதன் ஆனான்.