பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க்-கேசிகன்

29


பெறுவானும் சோழனே யாவான். நல்ல நிலவளம் உடையதாகப் புகழப்படுவதும் சோழ மண்டலமே ஆகும். பெண் என்னும் பெயருக்குரிய தகுதி நிரம்பியவளும் மிக்க அழகியான சிலம்பியே ஆவாள். அவளுடைய கமலம் போன்ற தாள்களில் அணிந் திருக்கும் செம்பொன்னாலாகிய சிலம்பே போற்றத்தக்க சிலம்பும் ஆகும்” என்பது பொருள்.

இச்செய்யுளின் ஒரு பாதி பொய்யாமொழியாராற் பாடப் பெற்றது எனவும், பிற்பாதியை ஒளவையார் பாடி முடித்தனர் எனவும் சிலர் கூறுவர்.

'அம்பொற் சிலம்பி’ என்பதற்குப் பதில், 'அம்பர்ச் சிலம்பி’ எனப் பாடபேதம் கொள்பவரும் உளர். அப்போது 'அம்பர் என்னும் ஊரினளான சிலம்பி’ என்று பொருள் கொள்ள வேண்டும்.

பொன் பெற்றுப் பாடிய பாதிப்பாட்டு காவிரியையும் சோழனையும் சோழ நாட்டையும் போற்றுவதுடன் நின்றது. ஒளவையார் அருள்கொண்டு பாடியதோ சிலம்பியைப் போற்றியதுடன் அமையாது, அவள் காற்சிலம்புகளையும் சேர்த்துப் புகழ்ந்ததாக அமைந்தது. அந்த அளவுக்கு அவள் வாழ்வு செழிக்க வாழ்த்தியதாகவும் விளங்கியது. இந்த நயத்தை நுட்பமாக அறிந்து இன்புறல் வேண்டும்.

18. ஆரையடா?

"சிலம்பி வீட்டிற்கு ஒளவையார் சென்றிருந்ததும், தம்முடைய செய்யுளை முடித்து அவளை வாழ்த்தியதும் கம்பருக்குத் தெரிந்ததும் அவர் சினம் கொண்டார். ஒளவையாரை எப்படியேனும் இழிவுபடுத்த வேண்டும்" எனவும் நினைத்தார்.

ஒருநாள், சோழன் அவையிற் புலவர் பெருமக்கள் பலரும் குழுமியிருந்தனர். அப்போது தம்முடைய சொற்குறும்பினைத் தொடங்கினார் கம்பர்.

ஆரைக்கீரை ஒரு தண்டின்மேல் நான்கு இலைகளை உடையதாக விளங்கும். அதனை மனத்தே கொண்டார்.

ஒளவையாரை நோக்கி, 'ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ' என்று சிலேடையாக ஒரு தொடரைச் சொன்னார். எஞ்சிய வற்றைச் சொல்லி ஒளவையார் செய்யுளை முடிக்க வேண்டும்.

கம்பரின் குறும்பினை ஒளவையார் புரிந்து கொண்டார். அதே பாணியில் சொல்லி, அவரை வாயடங்கச் செய்தார். அந்தப் பாடல் இது.