பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

ஔவையார் தனிப்பாடல்கள்



எட்டேகால் லட்சணமே எமனே றும்பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா?

"அவலட்சணமே! எமனின் வாகனமான எருமையே! அளவு கடந்த மூதேவியின் வாகனமான கழுதையே முழுவதும் மேற்கூரை இல்லாதுபோன வீடாகிய குட்டிச்சுவரே!. குலதிலகனான ராமனின் தூதனாகிய அனுமனின் இனமே! அடே! ஆரைக் கீரையைச் சொன்னாயடா!’ என்பது பாடலின் பொருள்.

'யாரையடா சொன்னாய்?’ என்பது போலவும் செய்யுள் ஒலிப்பது காண்க.

19. சிற்றாடைக்கு நேர்!

வையார் ஒருவரா? இருவரா? மூவரா? இதுபற்றிய விவாதம் நெடுங்காலமாக ஆன்றோர்களிடையே நிலவி வருவதுதான். ஒளவையார் என்ற பலகாலத்துப் புலவர் வரலாறுகளும் காலப்போக்கில் கலந்து போய்விட்டன. இதனை முன்னரே சொல்லியிருக்கிறோம். எவர் பாடியது? காலத்திற்கும் செய்யுளின் அமைதிக்கும் பொருத்தம் உண்டா? இப்படிக் கேட்பதனால் ஏற்படும் முடிவுகள், சில சமயங்களில் விபரீதமாகவும் போய்விடுகின்றன.

வள்ளல் பாரியின் மறைவுக்குப்பின், அவன் பெண் மக்களான சங்கவை அங்கவை என்பாரைக் கபிலர் திருக்கோவலூர் மலையமானின் மக்களுக்கு மணமுடித்ததாக ஒரு வரலாறு நிலவுகின்றது. கால ஒற்றுமையும் பிறவும் அதனை அரண் செய்கின்றன. எனினும், கபிலர் அவர்களைப் பார்ப்பார்பால் ஒப்பித்துவிட்டபின், தாம் வடக்கிருந்து உயிர் துறந்தனர் என்றவொரு செய்தியும் அதனுடன் கேட்கப்படுகின்றது.

ஒளவையார் பாரி மகளிரை மலையமானின் மக்கட்கு மணமுடித்தனர் என்பது மற்றொரு வழக்கு. அதற்குச் சான்றாக விளங்குவன சில செய்யுட்கள். அவற்றை நாம் காணலாம்.

இந்தச் செய்தியும் பாடலமைதியும் பொருத்தமற்றதெனக் கருதிய அறிஞர்கள் சிலர், பாரி என்பான் ஓர் இடையன் எனவும், அவன் மக்கட்கே ஒளவையார் முன்னின்று மணமுடித்து வைத்ததாகவும் உரைப்பார்கள்.

இந்தச் செய்திகளை மனத்தேகொண்டு, இதன் தொடர்பாக வரும் செய்யுட்களை மட்டுமே கற்று இன்புறுவோம்.