பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

35



ஒருகை யிருமருப்பு மும்மதத்து நால்வாய்க்
கரியுருவக் கங்காளன் செம்மல் - கரிமுகவன்
கண்ணால வோலை கடிதெழுத வாரானேல்
தன்னாண்மை தீர்ப்பன் சபித்து.

எனவும் இச்செய்யுள் வழங்கப்பெறும்.

“ஒற்றைக்கையும், இரட்டைக் கொம்புகளும், மூன்று மதங்களும், தொங்குகின்ற வாயும், யானை உருவமும் கொண்டோன் எலும்பணியும் சிவனின் சிறந்த மகன் யானை முகவன்! அவன் கல்யாண நாளோலை எழுதுவதற்கு விரைந்து வாராதிருந்தான் என்றால், அவனைச் சபித்து, அவன் ஆற்றலையே போக்கிவிடுவேன்” என்பது பொருள்.

இது விநாயகரை வேண்டிய ஒளவையாரை நோக்கி, 'விநாயகர் வராதிருந்தால்?’ என்று வினவின ஒருவரிடம் சொல்லியது என்பர்.

கடவுளரையும் சபிக்கும் ஆற்றல் உடையவர் உண்மைத் தொண்டர்கள். அந்த ஆற்றலைக் குறிப்பிட்டுக் காட்டுவதும் இச்செய்யுள் ஆகும்.

22. சேரலன் வருக!

விநாயகர் ஒளவையின் வேண்டுகோளை ஏற்று விரைந்து வந்தார். திருமண ஓலையினையும் எழுதித் தந்தார். திருமண நாளும் வகுத்தாயிற்று.

சேர சோழ பாண்டியராகிய மூவரும் பாரியை வஞ்சகமாகப் போரிட்டுக் கொன்ற பகையாளிகள். அதனால், பாரியின் மக்களை மணக்கும் திருக்கோவலூர் அரசர்கள் மீதும் அவர்கள் சினந்து பகை கொள்ளக்கூடும். அவ்வாறு ஒரு துயரம் அந்தப் பெண்களின் கணவர்கட்கு வரக்கூடாது. அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை முதலிலேயே செய்துவிட வேண்டும். இதனை நினைவிற் கொண்டார் ஒளவையார். அந்த மூவேந்தர்களையும் திருமணத்திற்கு வருமாறு அழைத்துத் தாமே அழைப்பு விடுக்கின்றார்.

'சேரலர்களின் கோமானே! சேரல் என்னும் பெயரையும் உடையவனே பேரழகினை உடைய திருக்கோவலூர் வரையும் வருவாயாக, உள்ளத்தில் அச்சம் எதுவும் வேண்டாம். பாரியின் மகளிர் அங்கவை, சங்கவை ஆகியோரை மணந்துகொள்ள, இந்தத் திருக்கோவலூர் அரசர்கள் இசைந்துள்ளார்கள்'. என்றபடி அந்த அழைப்போலை அமைந்தது.

சேரலனை 'உட்காதே' என்று கூறி அழைக்கிறார் ஒளவையார். பாரியைக் கொன்றதற்குப் பழி வாங்கும்