பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஒளவையார் தனிப்பாடல்கள்

அகர முதல எழுத்தெல்லாமாகி, சொல்லும் பொருளுமாக விரிந்து, இலக்கியங்களாகவும் இலக்கணங்களாகவும் மலர்ந்து என்றும் இளமையும் இனிமையும் செழுமையும் நிலைபேறாகப் பெற்று விளங்கும் உயர்தனிச் செம்மொழி, நம்முடைய அருமைச் செந்தமிழ் மொழியாகும்! என்று பிறந்ததென்று உணர முடியாததாய், காலத்தால் பழமையும் கருத்தின் ஆழத்தினாலே காலத்தையும் வென்று சிறந்த புதுமையும் உடையதாகத் திகழ்வதும், நம் கன்னித்தமிழ் மொழியாகும்.

மக்களிடத்தே, மக்களின் உள்ளத்து உணர்வுகளைப் புலப்படுத்தும் கருவியாகத் தோற்றம் பெற்று, மக்களின் உள்ள உணர்வும், அவர்களது சிந்தனையும், அவர்களது நாகரிகச் செவ்வியும் அவர்களது வாழ்க்கைச் செப்பமும், படிப்படியாக வளரவளரத் தானும் வளர்ந்து, 'வளமார்வண்தமிழ்’ என்னும் புகழுடன் திகழ்வதும் நம் தமிழ்மொழி ஆகும்.

உலகத்துப் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நாடோடி வாழ்வினராகவும், விலங்குகளோடு விலங்குகளாகவும், அறிவுத் தோற்றம் அற்றவராகவும் வாழ்ந்த அந்தப் பழைய நாளிலேயே, பல்லாயிரம் ஆண்டுகட்கும் முற்பட்ட அந்தத் தொன்மைக் காலத்திலேயே, இலக்கண அமைதியுடையதாகவும், இலக்கியச் செறிவு உடையதாகவும், ஏற்றம் பெற்றிருந்ததும் நம் செந்தமிழ் மொழி ஆகும்.

முடியுடைய மன்னர்கள் போற்றிப் புரந்துவர, முத்தமிழ்ப் பாவலர்கள் பாடிப் பரவிப் பண்படுத்திவர, முத்தமிழ் நாட்டினரும் முழு ஆர்வத்துடன் ஏற்று இன்புற்று, பாசத்துடன் எழில்பெருக்கிக் காத்துவரக், காலப்போக்கிலே அழிந்தும் ஒழிந்தும் சிதைந்தும் சீர்கெட்டும் போன பற்பல தொன்மைக்கால மொழிகளைப்போல் அல்லாது, அன்றும் இன்றும் ஒன்றுபோல, உயரிய செல்வமாக, என்றும் தன் எழில்நலம் குன்றாதுநிலைபெற்றிருப்பதும், இனநலம் காப்பதும் நம் தமிழ்மொழி ஆகும்.

இத்தகைய செழுந்தமிழ்த் தாயின் திருத்தொண்டிலே தம்மை ஈடுபடுத்திச் சிறந்தோர், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றமெறிந்த குமரவேளும், இந்திரனும், அகத்தியரும், நக்கீரரும், கபிலரும், பரணரும் மற்றும் பலருமாவர். இவர்களுள், தெய்வங்களாகத் திகழ்ந்த சிறப்பினரும், முனிவர்களாகி முற்றறிவுடையவராக