பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

57


விரும்பினான். எவரை நியமிப்பது நல்லது? இதற்கு ஒரு முடிவு காண அவனால் எளிதில் இயலவில்லை.

தளபதிகள் பலர் தருக்கோடு போர் செய்வதில் வல்லவர்களாக வெற்றிக்கொடி நாட்டி வந்தனர். உறவினரும் வீரருமான அவர்களையே நீதி நிருவாகப் பொறுப்பாளர்களாக ஆக்குவதற்கு அவன் விரும்பவில்லை. போரில் சிறப்புற்ற அவர்கள் குடிமக்களிடமும் கடுமையாக நடந்து கொண்டு விடுவார்களோ என அஞ்சினான். எனவே, அதுபற்றிய சிந்தனையிலே அவன் உள்ளம் சில நாட்களாகச் சுழன்று கொண்டிருந்தது.

ஒருநாள், ஒளவையார் சோழனைக் காணச் சென்றிருந்தார். இருவரும் மனங்கலந்து பல செய்திகளைப் பற்றி உரையாடினர். முடிவில், “ஏன் மன்னா! நின் உள்ளத்தில் ஏதோ ஒரு நினைவு புகுந்து நின் பேச்சில் உள்ளத்தை நாடவிடாது தடுக்கிறதே? அஃது என்னவோ?" என்றனர்.

சோழன், தன் உள்ளத்தை வாட்டிய கவலையை அவருக்குக் கூறினான். “நாட்டிலே நிருவாகப் பொறுப்பிற்குச் சிலரை நியமிக்க விரும்புகிறேன். நான்கு வகுப்பினருள்ளும் கற்றவர் உள்ளனர். எவரைத் தேர்ந்தெடுப்பது என்பதை என்னால் முடிவு செய்ய இயலவில்லை” என்றான்.

“நின் கருத்து நன்றுதான். ஆனால், அதனைப் பற்றிய செய்திகளை நினக்குச் சொல்லுகின்றேன். பிறகு நீயே முடிவு செய்க" என்று ஒளவையார் கூறலானார்:

“முதலில் பிராமணர்களை நியமிக்கலாம். அவர்கள் படித்தவர்கள். ஸ்மிருதிகளை நன்றாக அறிந்து வியாக்யானம் செய்கிறவர்கள். அவர்கள் நியமிக்கப் பெறுவார்களானால் நின் செங்கோன்மை பிறண்டுபோம். அவர்கள் பண்டிதராக, இருப்பார்களே அல்லாமல், நிருவாகப் பொறுப்பிற்குத் தகுதியுடையவர் ஆக மாட்டார்கள்.

நின் உறவினர்களாயின் போர் மறம் உடையவர்களாதலால், எளிதாகப் பேசி முடிவுகாணும் சிறுசிறு மாறுபாடுகளுக்குங்கூடப் போரிடற்கு எழுந்துவிடுவர். அதனால், நாட்டில் கொடிய போர்களே மலிந்துவிடும்.

வணிகர்கள் பொன்னைத் தொகுப்பதில் கருத்து உடையவர்கள். அந்த எண்ணம் வரிகளைக் கூட்டுவதிலும், பலபடியாக பொருள்களைச் சேர்ப்பதிலும் அவர்களை இழுத்துச் செல்லும். அதனால், குடியினர் துயருற்று நலிவர்.