பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

ஔவையார் தனிப்பாடல்கள்


தவறான பாதையிற் போகிறவர்களுக்குச் சிறந்த ஒரு உபதேசமாக இச்செய்யுள் விளங்குவதாகும்.

சுற்றும் கருங்குளவி சூரைத்தூற் றாரியப்பேய்
எற்றும் சுடுகாட் டிடிகரையின் - புற்றில்
வளர்ந்த மடற்பனைக்குள் வைத்ததேன் ஒக்கும்
தளர்ந்தோர்க்கொன் றீயார் தனம்.

"வறுமையுற்று வாடியவர்களுக்கு யாதும் கொடுக்காதவர்கள் சேர்த்து வைத்திருக்கும் செல்வமானது, கருங்குளவி சுற்றுவதாகவும், நெட்டிப்புல்லின் தூறுகள் உள்ளதாகவும் விளங்கும், ஆரியப்பேய் தாக்கும் சுடுகாட்டின் இடிகரையில் உள்ள பாம்புப் புற்றின் நடுவில் வளர்ந்துள்ள, ஓலை கழியாத பனை மரத்துள் வைக்கப்பெற்றதாக இருக்கின்ற தேனைப் போன்றது ஆகும்” என்பது பொருள்.

44. மனத்தின் தன்மை!

லகம் ஒரு சிறந்த தன்மையினை உடையது; இதன்கண் நாளும் பிறப்பவர் பல்லாயிரவர் ஆவர். பிறக்கும் உயிரினமோ பல கோடியாக இருக்கிறது. எனினும், பிறக்கும் இவை அனைத்திற்கும் வேண்டிய உணவுப் பொருள்களைத் தடையின்றிப் பெற்றிருப்பதாகவும் உலகம் விளங்குகின்றது.

உலகம், இவ்வாறு தேவையான அனைத்தையுமே உடையதாக இருக்கும்போது, சிலர் ஏராளமான செல்வ சம்பத்துக்களை உடையவராகவும், பலர் ஏழ்மை கொண்டவராகவும் விளங்குவது எதனால்? அது மனிதர்கள் சுயநலவாதியராக ஆகிவிட்ட கொடுமையினால் என்பார்கள். ஓரளவிற்கு அதுவே உண்மையும் ஆகும்.

இயற்கையில் அமையாது கிடைப்பது என்பது எதுவுமில்லை. பலருக்கும் பயன்படுகின்ற பொருள்களை ஒருவன் தனக்காகப் பதுக்கிக் கொள்ளும்போதுதான் பஞ்சம் ஏற்படுகின்றது. பதுக்குகிறவர்கள் அதிகமாகும்போது பஞ்சமும் அதிகமாய்ப் பரவுகின்றது. சிலர் உணவினை வீணடிக்கப் பலர் ஒருவேளை உணவுக்கும் வகையற்று வாடுகின்றனர். இந்த நிலைமை மாறுதல் வேண்டும்.

இந்த எண்ணம் வள்ளுவருக்கும் ஏற்பட்டது. 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ எனவும், 'இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பறந்து கெடுக' உலகியற்றியான் எனவும், அவர் நெஞ்சம் குமுறினார்.