பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

77


வேண்டும். அவன்பால் ஏதுமற்ற வறுமை என்பது நிலவுமானால், அது மிகவும் கொடுமையானது.

வறுமை மிகக் கொடிது! அதனிலும், வாழ்க்கை இன்பங்களை வெறுத்த முதுமையிலாவது, அவற்றை அறியாத பிள்ளை மையிலாவது ஒருவனை அது பற்றினால், அதனை அவன் ஒருவாறு பொறுக்கலாம். ஆனால், அனுபவத்திற்கு உரித்தான கட்டிளமைக் காலத்திலே வறுமை வந்தால், அது மிகவும் கொடியதாகும்.

எந்த மருந்தாலும் தீர்க்க முடியாத தீராத கொடிய நோயிலே கிடந்த ஒருவன், காலமெல்லாம் துடித்துக் கொண்டிருக்கின்றான். அவன் நிலைமை இளமையில் படும் வறுமையைவிடக் கொடுமையானது.

ஆற்ற முடியாத கொடுநோய்தான் மிகமிகக் கொடியது என்றால், அதனிலும் கொடியது, அன்பற்ற ஒருத்தியுடன் ஒருவன் கூடி வாழ்கின்ற துயரமான மனைவாழ்க்கை.

அத்தகையவள் கையால் உணவிட, ஒருவன் அதனையும் உண்டு தானும் உயிர் வாழ்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவனுடைய ஆண்மையற்ற அந்தத் தன்மை இருக்கிறதே, அதுதான் உலகத்தில் கொடியதாகும்!”

கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிதே இளமையில் வறுமை
அதனினுங் கொடிதே ஆற்றொணாக் கொடுநோய்
அதனினுங் கொடிதே அன்பில்லாப் பெண்டிர்
அதனினுங் கொடிதே
இன்புற அவள்கையில் உண்பது தானே!

"நெடிதான வெம்மையுடைய வேலினை ஏந்திய பெருமானே! கொடியது யாதென நீ கேட்பாயானால், ஏழ்மையே மிகவும் கொடியதாகும். அதனினும் இளமைப் பருவத்தே நிலவுகிற வறுமை மிகவும் கொடியது. அதனினும் போக்குதற்கு முடியாத கொடிய நோய், கொடுமை உடைய தாகும். அதனினும் அன்பில்லாத ஒருத்தியை மனைவியாகக் கொண்டிருப்பது கொடுமையாகும். அதனினும், அவள் கையால் இடப்பட்ட உணவினை உண்பது கொடுமை உடையதாகும்" என்பது பொருள்.

இதனால், உலக வாழ்வில் மிகுதியான கொடுமை என்பது, அன்பற்ற ஒருத்தியை மணந்து அவளுடன் வாழ்ந்து படும் அல்லற்பட்ட அவல வாழ்வே என்று அறிதல் வேண்டும். மக்களை நன்கு உணர்ந்த ஒளவையாரின் வாக்கு இது. பெண்மைக்கு உயர்வு தந்த பெருமாட்டி, பெண்களுக்கு