பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

ஔவையார் தனிப்பாடல்கள்


விடுத்துள்ள எச்சரிக்கையும் இதுவாகும். இதனைப் பெண்கள் அவசியம் உணர்தல் வேண்டும். ஆண்களும் நினைவிலே கொண்டு போற்ற வேண்டும்.

56. இனியது எது?

கொடுமையைப் பற்றி ஒளவையார் கூறிய விளக்கத்தைக் கேட்டான் குமரன். பின்னர் "இனியது எது?” என்று அவரை வினவினான். மிகக் கொடியது என்பது 'அன்பற்ற மனைவி இடுகின்ற உணவினையும் விருப்பத்துடன் உண்டு உயிர் வாழ்கின்ற ஆடவனின் நிலைமைதான்’ என்பதனை, முருகனும் ஏற்றுக் கொண்டான்.

‘இனியது எது?’ என்பதனைப் பற்றியும் ஒளவையார் முருகப் பெருமான் உவக்குமாறு தெளிவுபடுத்துகின்றார்.

'இன்பம் என்பது அவரவர் மனத்தின் அனுபவமே ஆகும். ஒருவன் ஒன்றை இன்பமாக நினைக்கலாம். அதனை இன்னொருவன் துன்பமாகக் கருதலாம். இன்ப துன்பங்கள் ஆகிய இரண்டும் கலந்து வருவதே உலக வாழ்க்கை. இவற்றைத் தருவன புலனிச்சைகள். அதனால், புலன்களை ஒடுக்கித் தனிமையாக இருந்து மனத்தைச் செவ்விதான நெறியில் செலுத்தினால், அது இன்பமானது எனலாம். இதனை 'ஏகாந்த நிலை என்றும் சொல்வார்கள். ஆகவே, 'ஏகாந்தம் இனிது’ என்று சொல்லல் ஒருவாறு பொருந்தும். -

அந்த ஏகாந்த நிலையில், ஆதியாகிய பரம்பொருளைத் தொழுதல் அதனினும் இனிதாகும்; அஃது ஒருவனின் உயிர்க்கு இன்ப நலத்தை மிகுவிப்பது ஆகும்.

ஆதியே தூய அறிவினன். அதனால், அறிவுடையாரை ஆதிபரம்பொருளின் அம்சம் பெற்றவர் எனலாம். காண முடியாத ஆதியைத் தொழுதலினும், அவனருள் பெற்றவரும், கண்ணாற் காணக் கூடியவருமான அறிவினரைத் தொடர்பு பெற்றவராகச் சேர்ந்து வாழ்தல் மிக இனிதாகும்.

அறிவினரோடு சேர்ந்து வாழ்ந்தாலும், நிலையற்ற மனம் வேறுவேறு சிந்தனைகளிற் செல்லலாம். அது சிறப்பு ஆகாது. அதனால், அறிவினரைச் சேர்ந்து வாழ்வதினும், அறிவுள்ளவரைக் கனவிலும் நனவிலும் வழிகாட்டுவோராகக் கொண்டு வாழ்வது மிகவும் இனிமையுடையது. 'தூய அறிவினைப் பெறுவதே மனிதனுக்கு இன்பம்’ என்ற கருத்தினை ஒளவையார் எடுத்துச் சொன்னார். சொன்னதும், அறிவே வடிவான ஆறுமுகன் மிகவும் மகிழ்ந்தான். அந்தச் செய்யுள் இது.