பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

79



இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனியது இனியது ஏகாந்தம் இனியது
அதனினும் இனியது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனியது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனியது அறிவுள் ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே.

“ஒப்பற்ற நெடிய வேற்படையினை உடையோனே! ஏகாந்த நிட்டையிலே இருப்பது மிகவும் இனிதானது. அதனினும் ஆதியைத் தொழுதல் இனிதானது. அதனினும் அறிவுடையவரோடு சேர்ந்திருத்தல் இனிதானது. அதனினும் அறிவுடையவரைக் கனவினும் நனவினும் காட்சியிற் கொண்டிருப்பது இனிதானதாகும்” என்பது செய்யுளின் பொருள்.

57. பெரியது எது?

லகிற் 'பெரியது' எது?” இது முருகனின் அடுத்த கேள்வி. இதற்கு மிகவும் நுட்பமாக விளக்கம் கூறுகிறார் ஒளவையார்.

"நாம் கண்ணாற் காணுகின்ற இந்தப் புவனம் மிகவும் பெரியது. இதனைப் படைத்தவனோ நான்முகன். அதனால், அவன் இதற்கும் பெரியவன் ஆகிறான்.

அந்த நான்முகனோ கரிய திருமாலின் உந்தியிடத்திலே பிறந்தவன். திருமாலோ அலைகடலிலே துயில்பவன். இதனால் நான்முகனிலும் திருமால் பெரியவன்; அவனினும் அலைகடல் பெரிதாக எண்ணத்தக்கது.

அலைகடலோ, ஒரு காலத்தில் அகத்தியரின் கையிலே அடங்கியதாயிற்று அகத்தியரோ கலயத்தில் பிறந்தவர்!

கலயமோ புவியிடத்துச் சிறிதளவான மண் புவியோ ஆதிசேடனுக்கு ஒரு தலைச்சுமை அளவே.

ஆதிசேடனோ, உமையவளின் ஒரு சிறு விரலிடத்தே மோதிரமாக இருப்பவன். உமையோ, இறைவனின் ஒரு பாதியுள் அடங்கி விடுபவள். இதனால், இறைவனே அனைத்தினும் பெரியவன் ஆகின்றான்.

பெரியவனான அப் பெருமான், அன்பர்களின் உள்ளத்தே நிலவி வருபவன். இதனால், எல்லாம் வல்ல சிவபெருமானைத் தம் உள்ளத்தில் கொண்டவரான தொண்டர்கள்தாம் உலகில் மிகவும் பெரியவர்கள். அவர்களின் பெருமை சொல்லிக்காட்டவும் முடியாத அளவிற்கு மிகமிகப் பெரியது ஆகும்” என்றார்.