பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

85



நினைத்ததை உடனே பாட வல்லவர்களை 'ஆசு கவிகள்' என்பார்கள். இவர்கள் சிறந்த சொல்லாட்சி உடையவராகவும். பலவகை யாப்புகளையும் நொடிக்குள் பாடும் திறன் படைத்தோராகவும் இருப்பார்கள்.இவர்கட்கும் வண்ணப்பாட்டுப் பாடுதல் மிகக் கடினமான செயலாக விளங்கும்.

வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் இத் துறையில் பிற்காலத்தில் உயர்ந்து விளங்கியவர்கள்.

இந்த மூவகைப் பாடல் பாடுவோரேயன்றிப் பிறவகைச் செய்யுட்களைச் செய்பவரும் உள்ளனர். இவ்வாறு விளங்கும் புலவர்கள் அனைவருக்குமே வெண்பாப் பாடுதல் மிகவும் முயற்சியுடைய செயலாகும்.

புலவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகைத் தனித்த திறமை இருக்கும். அதனை மதித்து அவரைப் போற்ற வேண்டுமே அல்லாமல், அவரை 'அது தெரியுமோ? இது தெரியுமோ?' எனக் கேட்டுப் புண்படுத்த முயலுதல் கூடாது. இதனை வற்புறுத்துவது இந்தச் செய்யுள்.

காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம்
பேசும் உலாவிற் பெதும்பைபுலி - ஆசு
வலவர்க்கும் வண்ணம் புலியாம் மற்றெல்லாப்
புலவர்க்கும் வெண்பாப் புலி.

“உலகத்தில் பிள்ளைத்தமிழ் நூல் செய்வோர்க்கு அம்புலிப் பருவம் பாடுவது அரிய முயற்சியாயிருக்கும். சிறப்பாகச் சொல்லப்படும் உலாவிலே, பெதும்பைப் பருவத்தை பாடுவது அரிய முயற்சியாயிருக்கும். எண்ணியவுடன் பாடுதலில் வல்லவரான ஆசுகவிகட்கு வண்ணப்பாட்டுப் பாடுதல் அரிய முயற்சியாக விளங்கும். ஆனால், புலவர் அனைவர்க்கும் வெண்பாப் பாடுதல் மிகவும் அரிய முயற்சியாக இருக்கும்” என்பது பொருள். 'புலி’ என்றது வல்லமையைக் குறித்துக் கூறியது ஆகும்.

62. நான்கு!

லக வாழ்வில் மனிதரின் செயல் முயற்சிகள் பலபடியாக அமைகின்றன. இவற்றையெல்லாம் 'அறம் பொருள் இன்பம் வீடு' என்னும் நான்கினுள் ஆன்றோர் அடக்கிக் காண்பார்கள்.

நான்கான இவற்றை விளக்கி உரைக்க எழுந்த அறநூல்கள் கணக்கில் அடங்கா. இவை நான்கின் தத்துவப் பொருளை ஒரே செய்யுளில் அடக்கி, அனைவரும் எளிதாகப் புரிந்து மேற்கொள்ளும்படியாக உதவுகின்றார் ஒளவையார்.