பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பர் என்ன சொன்னார்

95


இலக்கியங்களும், இன்றைய எழுத்தாளர் தம் கதைகளும் இன்று தமிழில் மொழிபெயர்க்கப் பெறுகின்றன. இன்னும் மேலைநாட்டு மொழிகளிலிருந்தும் பற்பல நூல்கள் மொழி பெயர்க்கப் பெறுகின்றன. தமிழ் நாட்டில் மட்டுமின்றி, உலகிலேயே பற்பல நாடுகளில் வாழும் பற்பல மொழி யாளர்கள் எட்டுத் திக்கும் சென்று பிற மொழியில் உள்ள கலைச்செல்வங்களைத் தத்தம் மொழியில் பெயர்த்தெழுதிக் கொள்ளுகின்றனர். இவ்வாறு இன்றைய இலக்கியங்கள், எம்மொழியில் அவை தோன்றின போதிலும், உலக அரங்கில் விரைந்து பரவி நிறைந்துவிடுகின்றன. இதே நிலை இடைக்காலத்தில் தமிழ் நாட்டில் இருந்தது.

இடைக் காலத்தில் வடமொழிக் காவியங்கள் தமிழ் நாட்டில் அதிகமாகப் பரவின. அவற்றுள் பலவற்றைத் தமிழும் வடமொழியும் ஒருங்கு பயின்ற அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்த்தார்கள். அத்தகைய மொழிபெயர்ப்பு நூல்களுள் கம்பரது இராமாயணம் தலை சிறந்ததாக உள்ளது. மற்றவையெல்லாம் கால வெள்ளத்தில் அகப்பட்டுப் பெரும்பாலும் அழிந்தொழியக் கம்பரது இராமாயணம் மட்டும் கால வெள்ளத்தை எதிரிட்டு ஏற்றம் பெற்று வாழ்வதோடு, இன்று உலக இலக்கியமாகும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. பிறவெல்லாம் தாழ்வடைய இதுமட்டும் இவ்வாறு ஏற்றம் பெறுவானேன்? காரணம் இதுதான்: இராமாயணமாகிய வடமொழிக் காவியத்தைக் கம்பர் மொழிபெயர்த்தாலும், அதில் வரும் கதையை அவர் தம் நாட்டு மக்கள் வாழ்க்கைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொண்டார். தம் நாட்டு மக்கள் வாழ்வோடு பின்னிய காப்பியமாக அதை அமைத்துவிட்டார் அக்கவிஞர்! கதைப்போக்கில் எத்தனை எத்தனை மாற்றங்கள். தமிழ் நாட்டுத் தவறாத கற்பு நெறிக்கு ஏற்ப இராவணன் சீதையைக் கையால் தொடவும் விடவில்லை. வால்மீகியார், ‘இராவணன் சீதையைக் கூந்தலைப் பற்றி பிடித்துச் சென்றான்,’ என்று கூறியிருக்கவும், அதை அப்படியே மொழிபெயர்க்காது, ‘மண்ணொடும் கொண்டு போனான்’