பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பர் என்ன சொன்னார்?

97


பங்கம் நேரா வழியில் தம் கடமையைச்செய்தாரே அதற்காக அவர் போற்ற வேண்டியவரேயன்றித் தூற்றப்பட வேண்டியவர் அல்லரே!

இனி இராமாயணத்தை வேண்டா என்பவர் காட்டும் ஒரு முக்கிய காரணம், அது ஆரிய திராவிடப் போராட்டத்தைக் குறிப்பதாகும் என்பதே; ஆழ்ந்து நோக்கின், இராமாயணத்தில் இந்த வேறுபாட்டுக்கு இடமே இல்லை எனலாம். இராமனை ஆரியனாகவும், இராவனனைத் திராவிடனாகவும் அவர்கள் கருதுவதாகத் தெரிகின்றது. அவ்வாறு கருதுவதற்கு இராமாயணத்திலோ, அன்றி வேறிடத்திலோ யாதொரு சான்றும் கிடையாது. ஆனால், அதற்கு நேர் மாறாக இருவருமே ஆரியர் என்ற குறிப்புத்தான் வருகின்றது. இராமனை ஆரியன் என்று விளக்கிக் காட்டத் தேவையில்லை. ஆனால், ‘இராவணன் திராவிடன் அல்லன்; ஆரியேன்’ என்று சொல்லிக் காட்டல் வேண்டும். நூல் முழுவதிலும் கம்பரோ, அன்றி வான்மீகியாரோ இராவணனைத் திராவிடன் என்றோ தமிழன் என்றோ காட்டவில்லையே! இராவணன் பிறந்த மரபினைக் குறிக்கும் போது கம்பர் ‘சுந்தர நான்முகன் மரபில் தோன்றினான்’ (சடாயு. 41) என்று பிரமாவினுடைய மரபில் அவன் வந்தவன் எனக் குறிக்கின்றார். பின்னும் புலத்தியன் மரபு என்று ஆரிய மரபினையே காட்டுகின்றார். மரபு மட்டுமன்றி, அவன் மொழியே வடமொழிதான் என்பதை அவன் சாமவேதத்தில் வல்லவன் என்பதன் மூலம் காட்டுகின்றார். மற்றும் அனுமன்—பலமொழி அறிந்த சொல்லின் செல்வனாகிய அனுமன்—இராவணனுடன் பேசும்போது எம்மொழியில் பேசலாம் என நினைத்து, அவன் ஆரியன் ஆதலால், வடமொழியிலேயே பேசவேண்டும் என்று முடிவு செய்து அவ்வாறே பேசினான் என வான்மீகியார் காட்டுவதாக அறிஞர் கூறுவர். மற்றும் இராவணனை ‘ஆரிய’ என்றே அனுமன் விளிப்பதாகக் காண்கின்றோம். இத்தனையும் இருக்க, அவனை

7