பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


லாம். இவற்றைக் கொண்டே, ‘அவர் நூலே தவறுடையது; ஏற்கத்தக்கதன்று,’ என்று கூறுதல் பொருந்தாது என்பதைத்தான் காட்ட வந்தேன். அவர் நூல் இல்லையாயின், எத்தனையோ பல நல்ல கருத்துக்களை நாம் காண முடியாதே!

இனி, கம்பர் அவ்வாறய தம் கவிதையில் என்ன சொன்னார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். உலகம் தோன்றிய நாள் தொட்டு, இன்றுவரை, எத்தனையோபேர் இவ்வுலகம் வாழப் பாடு படுகின்றனர். மனிதன் இன்றைய நிலையைப் பெற எவ்வளவோ இன்னல்களை அனுபவித்தான்; இயற்கையோடு போராடினான். வன விலங்குகள் அவனை வாட்டின, கடல் கொந்தளிப்பு அவனைச் சீரழித்தது. அவன் ஒரு காலத்தில் வாய் மூடி மெளனியாய் இருந்தான்; பின்பு பேசினான்; பின்பு அறிந்தான்; உலகைச் சுற்றி நோக்கினான்; அவற்றின் இடையிலே தன்னைப் போன்ற மனிதர்களும் பிற உயிர்களும் வாழ்வதைக் கண்டான்; அனைத்தும் ஒன்றினோடு ஒன்று போரிட்டு வாழ்வதையும் அறிந்தான்; அறிந்து, அறிவு வரப் பெற்றவனாய தான் அத்தனைக் கொடுமைகளையும் எதிர்த்துப் பண்போடு வாழ்தலே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தான். அந்த முடிவில் முளைத்தனவே அற நூல்களும் பிறவும். உலகில் உள்ள மற்றவரையும் மற்றவைகளையும் வாழவைக்கவே தான் வாழ்தல் மனிதப்பண்பு என்ற உணர்வு அவனுக்குத் தோன்றிற்று. உடனே சமரச ஞானம் உதித்தது. உலகை எல்லாம் ஒத்து நோக்கும் உணர்வு அரும்பிற்று. அந்த உணர்வுதான் வள்ளுவரைப் ‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்,’ என்று பேச வைத்தது.

ஆனால், மனிதன் எக்காலத்திலும் அந்த உணர்வோடு வாழவில்லை. சில சமயங்களில் அவன் மிருகமாகிவிடுகின்றான். ஏன்? மிருகத்தினும் கீழாகக்கூடச் சென்றுவிடுகின்றான். அச்சமயத்திலெல்லாம் நாட்டில் நல்லவர்