பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


விட்டான்; அவள் தந்த அடையாளத்தையும் கொடுத்து விட்டான் இராமனிடம். ஆனால், அங்குத்தான் பேராற்றலால் பகைவரைப் புறமுதுகிடச் செய்து வெற்றி பெற்று வந்த சிறப்பினையெல்லாம் கூறவில்லை. காரணம் என்ன? தன் வெற்றியைத் தானே கூறிக்கொள்வது இழுக்கல்லவா? இதோ கம்பர் அக்கருத்தினைக் காட்டுவதைக் காணுங்கள்:

'

ஆண்டகை தேவி உள்ளத்து அருந்தவம் அமையச் சொல்லிப்
பூண்டபேரடையா ளம்கைக் கொண்டதும் புகன்று போரில்
நீண்டவாள் அரக்க ரோடு நிகழ்ந்ததும் நெருப்புச் சிந்தி
மீண்டதும் விளம்பான் தான்தன் வென்றியை உரைப்ப வெள்கி

’ -

(திருவடி. 9)

என்ற பாடலே அது.

இருபதாம் நூற்றாண்டுக்கு இடையில் எத்தனையோ காட்சிகளைக் காண்கிறோம். நடக்காத கொடுமைகளும் நடக்கின்றன. உலக அரங்கிலே வல்லரசுகள் மற்றச் சிறு நாடுகளை ஆட்டிப் படைக்கின்றன. நம் நாட்டிலும் உரிமை நாளின் முன்னும் பின்னும் பற்பல கொடுமைகளைக் கண்டோம். இந்த வங்கநாட்டிலே மக்கள் பெற்ற வாட்டத்தை மனித இனம் உள்ளவரை யாரும் மறக்கமுடியாது. வங்கம் துண்டிக்கப்படுமுன் நடந்த கொடுமைகளை நினைக்கவும் நெஞ்சு நடுங்கும்! இங்கும் பீகாரிலும் சமயத்தின் பேரால் அன்று நடந்த கொடுமை, மனிதன் பண்பற்றவன் என்பதைத்தான் காட்டுகின்றது. நவகாளியில் மகமதியர்கள் இந்துக்களைப் படுத்தின கொடுமை பற்றி அன்று நான் பத்திரிகையில் படித்ததுண்டு. ஒரு வேளை இங்குள்ளவருள் ஒரு சிலர் அக்கொடுமையினைக் கண்டிருக்கவும்கூடும். அந்த நாள் அஞ்சத்தக்க நாளாயிருந்தது. ஆனால், அதே வேளையில் அண்ணல் காந்தி அடிகள் கொந்தளிப்புக் கிடையில் நல்ல கொள்கை முளைப்பதைக் காட்டினார்; தாம் அங்கிருந்து மக்கள் வாழ்வில் அமைதியைத் தேடினர். பெண்களுள் பலர் கற்பழிக்கப்பட்டார்களாம். அக்கற் பழிக்கப்பட்ட பெண்களைத் திரும்பவும் கணவன்மார் ஏற்-