பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பர் என்ன சொன்னார்

109



றுக்கொள்ளத் தயங்கினர்களாம். ஆனால், காந்தியடிகளார் அப்பெண்கள் நெஞ்சறியத் தவறு செய்யவில்லை என்பதை எடுத்துரைத்து, 'நெஞ்சினால் பிழைப்பிலாரை நீர் அழைத் திடுக' என்று கணவர்களுக்கு ஆணையிட்டாராம். அவர்களும் அதை உணர்ந்து மனைவியரை ஏற்றுக்கொண்டனராம். இது இருபதாம் நூற்றாண்டின் இடையில்-நாகரிக வாழ்வுக்கிடையில்-கண்ணால் கண்ட ஒரு காட்சியாகும். குற்றமற்ற பெண்கள் கற்பழிக்கப்பட, அதனால் அவர்தம் வாழ்வு பாழாகக்கூடாது என்று காந்தி அண்ணல் நெஞ்சறியத் தவறாத அம்மங்கை நல்லாரை அவரவர் கணவருடன் சேர்த்த காட்சி நம் கண்முன் கண்ட காட்சி. இதில் எத்தனை உயர்ந்த பண்பாடு-மனிதவுணர்ச்சி-மன்னிக்கும் மனப்பான்மை-நிறைந்துள்ளது! இதே நிலையில் கம்பரும் ஒரு காட்சியை நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். அன்று அவர் கூறிய சொற்களும் ஒன்றாகவே அமைகின்றன.

அகலிகை சாபநீக்கம் அனைவரும் அறிந்ததே. கெளதமன் பத்தினியாகிய அவள் இந்திரனல் கற்பழிக்கப்பட்டதும், அம்முனிவன் அவளைக் கல் ஆக்கியதும், பின் இராமன் அடியால் அவள் மறுபடியும் பெண்ணுகியதும், அவளை முனிவனிடம் சேர்த்துவிட்டு இராமன் மிதிலை சென்றதும் வான்மீகியார் எழுதிய கதை. வான்மீகியார், இராமன் அகலிகையை அழைத்துச் சென்று அவளைப் பற்றி ஏதும் கூறி அவரிடம் விட்டதாகக் காணவில்லை. அகலிகையை அவள் கணவனிடம் சேர்த்து இராமன் மேலே நடந்தான் என்றுதான் அவர் கூறுகின்றார். நான் வான்மீகியாரின் கதையைப் படிக்காவிட்டாலும் சிறந்த வடமொழிவாணர் வழிக்கேட்ட ஒன்றையே இங்குக் குறிக்கின்றேன். ஆனால், அதே காட்சியைக் கம்பர் எவ்வளவு சிறந்த வழியில் காட்டிச் செல்கின்றார்! அன்று அகலி கைக்கு வாழக் கம்பர் காட்டிய அதே வழிதான் இன்று நவகாளியில் வழுக்கி வீழ்ந்த மங்கையரை வாழ்வித்தது! இராமன் அகலிகையைக் கெளதமரிடம் அழைத்துச் சென்றான்; சென்று, அவளை ஏற்றுக்கொள்க என்றான்.